அடுத்தடுத்து மாற்றப்பட்ட ஆட்சியர்கள்... பந்தாடப்படும் அதிகாரிகள்... பரபரப்பு பின்னணி..!

By Selva KathirFirst Published Oct 10, 2019, 10:49 AM IST
Highlights

கடந்த ஓராண்டாகவே இந்த குற்றச்சாட்டு நீடித்து வந்த நிலையில் அதிகாரிகளை பக்குவமாக களை எடுக்க ஆரம்பித்தார் எடப்பாடி. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நவம்பரில் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களுக்கு அடங்கிப்போகும் ஆட்சியர்கள் தேவை என்று மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடியை நச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே ஆட்சியர்கள் மற்றும் செயலாளர் நிலையிலான அதிகாரிகள் திடீர் திடீரென மாற்றப்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசை பொறுத்தவரை கலெக்டர்கள் மாற்றம் மற்றும் அதிகாரிகள் இடமாற்றம் போன்றவை வழக்கமான ஒன்று தான். ஆனால் எடப்பாடி முதலமைச்சரான பிறகு அதிகாரிகள் பணியிடமாற்ற விவகாரத்தில் மிகவும் கவனமாக இருந்து வந்தார். திருவள்ளூர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர்கள் எல்லாம் 3 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கேயே பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் திடீரென அவர்களை கடந்த மாதம் பணியிடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. இதே போல் சுகாதாரத்துறை செயலாளராக பல வருடங்களாக இருந்த வந்த ராதாகிருஷ்ணன் போக்குவரத்து துறை செயலாளராக தூக்கி அடிக்கப்பட்டார். நேற்று அவரை வருவாய் நிர்வாக ஆணையராக தமிழக அரசு மாற்றியுள்ளது.

இதே போல் மதுரை மாவட்ட ஆட்சியராக வினய் நியமிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் தான் அவர் தென் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். தற்போது மீண்டும் அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எதற்காக அதிகாரிகளை இப்படி தமிழக அரசு பந்தாடுகிறது என்பது குறித்து விசாரித்த போது கிடைத்த தகவல் அதிமுக மாவட்டச் செயலாளர்களை நோக்கி செல்கிறது.

ஜெயலலிதா இருந்த போதே சரி, அதிமுக ஆட்சியில் இருந்தால் அந்த மாவட்டச் செயலாளர்கள் வைப்பது தான் சட்டமாக இருந்தது. ஆனால் அவர் மறைவுக்கு பிறகு மாவட்டச் செயலாளர்கள் அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். இதனால் அதிகாரிகள் கை ஓங்க ஆரம்பித்தது. பல ஒப்பந்தப்பணிகள் மாவட்டச் செயலாளர்கள் ஒப்புதல் இல்லாமலே அதிகாரிகள் தங்கள் விருப்பப்பட்டவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தனர். இதற்கான கமிசனும் சரியாக மாவட்டச் செயலாளர்களுக்கு வரவில்லை என்று சொல்கிறார்கள்.

கடந்த ஓராண்டாகவே இந்த குற்றச்சாட்டு நீடித்து வந்த நிலையில் அதிகாரிகளை பக்குவமாக களை எடுக்க ஆரம்பித்தார் எடப்பாடி. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நவம்பரில் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களுக்கு அடங்கிப்போகும் ஆட்சியர்கள் தேவை என்று மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடியை நச்சரித்துள்ளனர். ஏனென்றால் உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை மாவட்ட ஆட்சியர் எடுக்கும் முடிவு தான் கடைசி. அந்த வகையில் தான் ஒவ்வொரு மாவட்டமாக அங்குள்ள மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களுடன் இணக்கமாக செல்லும் அதிகாரிகள் ஆட்சியராக நியமிக்கப்படுவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

click me!