#BREAKING திறக்கப்படும் ஏரிகள்.. SMS மூலம் பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை..

By Ganesh RamachandranFirst Published Nov 7, 2021, 11:02 AM IST
Highlights

சென்னையின் முக்கிய நீராதாரங்களான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகிய ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டுவதால், அவற்றை திறக்க திருவள்ளூர், காஞ்சிபுரம் கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பலரது வாழ்வை புரட்டிப் போட்ட பேரிடர் அது. ஆனால் அது இயற்கைப் பேரிடர் அல்ல, அளவுகடந்து ஏரிகளைத் திறந்துவிட்டதால் வந்த வினை என்று குற்றம்சாட்டுவோரும் உண்டு. 2015ம் ஆண்டு வெள்ள காலத்துக்குப் பிறகு மிக அதிகமான மழை அளவு பதிவானது இன்று தான் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் தான் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டுவதால், அவற்றைத் திறக்க காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் தண்ணீர் அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பதால் இன்று காலை 11 மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால் கரையோர மக்களான நாரவாரிகுப்பம், பெருங்குப்பம், மஞ்சங்குப்பம், தண்டல் கழனி, வடகரை, கிராண்ட்லைன், புழல் மணலி, சடையான்குப்பம் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். இன்னும் மழையின் அளவு அதிகரிக்கும் என்று கருதப்படுவதால் மக்கள் இந்த எச்சரிக்கையை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

புழல் ஏரி

புழல் ஏரியின் மொத்த நீர் மட்டம் 21.20 அடி ஆகும். இதில் தற்போது 19.30 அடி வரை நீர் இருப்பு உள்ளது. இதன் முழு கொள்ளளவு 3, 300 மில்லியன் கன அடி நீர் ஆகும். 2,872 மில்லியன் கன அடியாக தற்போதைய நீர் இருப்பு உள்ளது. இதன் காரணமாக காலை 11 மணி முதல் விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எம்.எஸ் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இதே போல காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிவிப்பில், செம்பரம்பாக்கம் ஏரியில் மதியம் 1.00 மணி முதல் 1.30 மணிக்குள் நீர் திறப்பு ஆரம்பமாகும் என்றும், இதனால் நத்தம், குன்றத்தூர் , நத்தம்பாக்கம்,வழுதலம்பேடு, பூந்தண்டலம், பழந்தண்டலம் ,எருமையூர், திருமுடிவாக்கம் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டு கொண்டுள்ளார். செம்பரம்பாக்கம் அணை கொள்ளளவு 25.55 அடி ஆகும். இதில் தற்போது அணையின் நீர் இருப்பு 21.22 அடியாக உள்ளது. அதே போல பூண்டி ஏரியில் இருந்தும் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட உள்ளது. வினாடிக்கு 4000 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் அடையாறு மற்றும் கூவம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எஸ்.எம்.எஸ் மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

click me!