
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், விருதுநகரில் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்க, முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த பல் மருத்துவக் கல்லூரியில் 100 மாணாக்கர்களை சேர்க்கவும், கல்லூரி தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள, கல்லூரி முதல்வர் பதவியினை உருவாக்கவும், தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற மக்களுக்கு இணையாக, கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ வசதிகள் கிடைக்கும் வகையில், கிராமப்புறங்களிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்துதல், மருத்துவ உபகரணங்கள் வாங்குதல், மருத்துவமனைகளுக்கு புதிய கட்டங்கள் கட்டுதல், புதிய மருத்துவ நிலையங்களை ஆரம்பித்தல் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மட்டுமே சென்னையில் உள்ளது. ஜெயலலிதா ஆட்சியில்தான் இந்த மருத்துவமனைக்கு புதிய கட்டடம், மற்றும் கூடுதல் கட்டடம் போன்ற அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. மேலும்இந்த பல் மருத்துவமனை ஓர் ஒப்புயர்வு மையமாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் சென்னை தவிர வேறு எங்கும் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படவில்லை என்ற குறையை நிவர்த்தி செய்யும் வகையில், மறைந்த முதலமைச்சர் தென் தமிழகத்தில் ஒரு புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி 50 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும் என்று கடந்த 2015 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் அறிவித்தார்.
ஜெயலலிதாவின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையிலும், தென் தமிழகத்தில்உள்ள மக்களின் நீண்டநாள்கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையிலும், விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி ஒன்று தொடங்கிட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் கல்லூரியில் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் - பல் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்குவதற்காக ஒரு கல்லூரி முதல்வர் பதவியினை உருவாக்குவதற்கும், முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கை மூலம் தென் தமிழக மாணவர்கள், அதிக அளவில் பல் மருத்துவம் பயிலுவதற்கு வழிவகைசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது