பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது என்று கூறிய பிறகுதான், இஸ்லாமியர்கள் குறித்த நினைவே முதல்வர் ஸ்டாலினுக்கு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் வந்துவிட்டதால் மக்களை ஏமாற்ற நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை திமுக தொடங்கியுள்ளனர் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் இஸ்லாமியர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்;- பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறு வந்ததும் திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக அதிமுக இருப்பது போல் வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக பொய் பிரச்சாரம் செய்கிறது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது என்று கூறிய பிறகுதான், இஸ்லாமியர்கள் குறித்த நினைவே முதல்வர் ஸ்டாலினுக்கு வருகிறது. சிறுபான்மை மக்கள் அதிமுக பக்கம் சாய்ந்துவிடுவார்கள் என்ற அச்சம் முதல்வருக்கு வந்துவிட்டது என்றார்.
சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட இயக்கம் அதிமுக. இஸ்லாமியர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்தது அதிமுக அரசு. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது தமிழகத்தில் நட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணி காக்கப்பட்டது என்றார். நாடாளுமன்ற தேர்தல் வந்துவிட்டதால் மக்களை ஏமாற்ற நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர். 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று யாரிடம் கொடுக்க உள்ளனர்? இதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ள நிலையில் அவற்றை திமுக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என குற்றம்சாட்டினார். கூட்டணிக்காக பெங்களூரு சென்ற ஸ்டாலின் காவிரி நீர் தொடர்பாக ஏன் கேட்கவில்லை? காவிரி உரிமையை பெற்றுத்தர முடியாத பொம்மை முதல்வராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். திமுக ஆட்சியில் காவிரி நீரை பெறாததால் சம்பா செய்ய முடியாததால் அரிசி விலை மேலும் அதிகரிக்கும் என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் வைப்பது. ஆனால், கட்சியின் கொள்கை நிலையானது. அதிமுக ஒன்றும் பாஜகவின் B டீம் கிடையாது. நாங்கள் தான் ஒரிஜினல் A டீம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.