அந்த வார்த்தையை சொல்லி பிரதமரை சீண்டிய முதல்வர்..! ரத்தம் கொதிக்கும் தமிழக பா.ஜ.க..!

By Ganesh RamachandranFirst Published Jan 14, 2022, 9:22 AM IST
Highlights

"பிரதமர் முன்னிலையிலேயே இப்படி பேசி சீண்டிவிட்டாரே" என்று பல பாஜக தலைவர்களையும் இந்த விஷயம் சூடேற்றியுள்ளதாம்...

தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்தபோது கூட பா.ஜ.க. பெரிதாய் கடுப்பாகவில்லை. ஆனால் அரசு நிர்வாகத்தை கையில் எடுத்த ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர் மத்திய அரசாங்கத்தை ‘ஒன்றிய அரசு’ என்று அழைக்க துவங்கியபோது ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்றது பா.ஜ.க. ஸ்டாலின் டீம் சொன்னது மட்டுமில்லாமல் தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் மற்றும் வி.சி.க. உள்ளிட்டோருமே மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்றுதான் குறிப்பிடுகின்றனர்.

இதுமட்டுமல்ல ஆளுங்கட்சி நடத்தும் செய்தி சேனல் மட்டுமில்லாமல் அக்குடும்பத்தின் அங்கத்தினர் நடத்தும் மிக முக்கிய செய்தி சேனலும் கூட தங்களின் நியூஸில் மத்திய அரசை அப்படித்தான் சொல்லுகின்றனர். இதை தமிழக பா.ஜ.க.வினர் டெல்லிக்கு ஒரு புகாராக கொண்டு போனபோது அமித்ஷா, முடிந்தால் பதிலடி கொடுங்கள். இல்லையென்றால் அலட்சியம் பண்ணிவிடுங்கள். நமக்கென்று ஒரு காலம் அமையும். அப்போது கவனித்துக் கொள்ளலாம்! என்று சிம்பிளாக அட்வைஸ் சொல்லி அனுப்பிவிட்டார்.

ஆனாலும் அமைதியாகாத தமிழக பா.ஜ.க. கடந்த தேர்தலில் தி.மு.க.வும் அதன் கூட்டணியும் வலுவான அடி வாங்கிய தமிழகத்தின் மேற்கு மண்டலத்தை மையமாக வைத்து ஒரு புரட்சியில் இறங்கியது. அதுதான் ‘கொங்கு நாடு’ எனும் கான்செப்ட். அதாவது நீலகிரி, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய  மாவட்டங்கள் அடங்கிய கொங்கு மண்டலத்தை தமிழகத்தில் இருந்து தனியே பிரித்து, தனி நாடாக அறிவிக்க சொல்லி ஒரு குரலை எழுப்பிவிட்டனர்.

பா.ஜ.க.வே எதிர்பாராத வகையில் பிய்ச்சுக் கொண்டது.  குறிப்பாக மேற்சொன்ன மாவட்டங்களை சேர்ந்த விவசாய இயக்கங்கள், தொழில் கூட்டமைப்புகள், பல்வகையான சங்கங்கள் ஆகியனவும் பா.ஜ.க. எழுப்பிய ‘கொங்கு நாடு எனும் தனிநாடு’ கோஷத்துக்கு ஆதரவை வழங்கினர். இதை சற்றும் எதிர்பார்க்காத தமிழக அரசு மிரண்டு போனதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். காரணம், தமிழகத்தின் வருவாயில் மிக மிகப்பெரிய சதவீதமானது கொங்கு மண்டல மாவட்டங்களில் இருந்துதான் வருகிறது. கோவை, திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களின் வருவாய் மட்டும் இல்லையென்றா தமிழக அரசின் கஜானா கந்தலாகிவிடும். அதனால் அதிர்ந்த தமிழக அரசு மெளனம் காட்டிட, மெதுவாக அடங்கிப்போனது கொங்குநாடு கோஷம்.

இந்நிலையில், தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை காணொலி காட்சி மூலமாக டெல்லியில் இருந்து துவக்கி வைத்தார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. இதில் இணைந்திருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னையிலிருந்தபடி இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்றே பல முறை குறிப்பிட்டார்.

இது தமிழக பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மாநில நிர்வாகிகளை கடுமையாக அதிருப்தி கொள்ள வைத்துள்ளதாம். பிரதமர் முன்னிலையிலேயே இப்படி பேசி சீண்டிவிட்டாரே. காலங்காலமாக  மைய அரசை ‘மத்திய அரசு’ என்றுதான் மாண்போடு அழைத்தனர். இவர் மட்டும் இப்படி அசிங்கப்படுத்துகிறாரே! என்று கொந்தளித்துள்ளனர். தமிழில் ஸ்டாலின் அப்படி குறிப்பிட்டது பிரதமருக்கு புரிந்திருக்காது என்பதால் அதன் பின் இந்த விவகாரத்தை தனியாக பிரதமரிடம் அழுத்தி தெரிவித்துள்ளனர். அவர், அப்படியா! என்பது போல் தலையாட்டிவிட்டு நகர்ந்துவிட்டாராம்.

ஆனால் மத்திய அமைச்சர்கள் பலருக்கு இந்த விஷயத்தில் ஸ்டாலின் மீது கடும் கோபம். அதனால் அன்று கொங்கு நாடு! என்று ஒரு விஷயத்தை கிளப்பி நடுங்க வைத்தது போல், இப்போது வேறு ஒரு வகையில் ஸ்டாலின் அரசுக்கு வீரியமான பதிலடி கொடுக்க திட்டமிட்டுக் கொண்டுள்ளனராம். அநேகமாக பொங்கலுக்கு பிறகு அந்த சரவெடி வெடிக்கலாம் என்கிறது கமலாலய வட்டாரம்.

click me!