கோவையில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா… முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!! | CMStalin

By Narendran SFirst Published Nov 22, 2021, 3:04 PM IST
Highlights

#CMStalin | கோவையில் கடந்த பத்து ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விமான நிலைய விரிவாக்க பணிக்கு ரூ.1131 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கோவையில் கடந்த பத்து ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விமான நிலைய விரிவாக்க பணிக்கு ரூ.1131 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவையில் ரூ.587.91 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.89.73 கோடி செலவில் முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் 23 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்குகினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் பணியாற்றி வருவதாகவும் பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் திமுக அரசு பணியாற்றி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆட்சியை அமைத்த அன்றே உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற தனித்துறையை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சியில் மனு அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், லட்சக்கணக்கான மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதே நேரத்தில் நிறைவேற்ற முடியாத மனுக்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இன்றும் வழி நெடுகிலும் தன்னிடம் மனு அளிக்கப்படுவதாகவும் மிகப்பெரிய திட்டங்கள் போட்டாலும் தனிநபர் கோரிக்கை சார்ந்த மனுக்களை நிறைவேற்றுவது முக்கியம் என்றும் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவையில் கடந்த பத்து ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விமான நிலைய விரிவாக்க பணிக்கு ரூ.1131 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாநகராட்சி சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்களுக்கு முக்கியத்துவன் அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆட்சி காலத்தில் திட்ட சாலை பணிகள் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், மீண்டும் திட்ட சாலைகள் மேம்படுத்த உதவி செய்யப்படும் என்றும் மாநகரில் உள்ள சிறைசாலை புறநகருக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் காந்திபுரத்தில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

மேலும் கோவையில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் நல்வாழ்வு மையங்கள், மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும் சென்னையை போன்று கோவை மாநகருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியினை முடித்துக் கொண்டு திருப்பூரில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிய அரசு கட்டிடங்களை திறந்துவைக்கிறார். அதை தொடர்ந்து நாளை கொடியா அரங்கில் நடக்கும் முன்னணி நிறுவனங்களின் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்விலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்கிடையே ஸ்டாலினின் கோவை பயணத்தை வரவேற்று #KovaiWelcomesStalin என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு போட்டியாக ஸ்டாலினின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackStalin என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. 

click me!