விரைவில் யாரும் பார்க்காத ”புதிய கோவை”.. ரெடியாகும் ”மாஸ்டர் பிளான்”.. கோவையில் தெறிக்கவிட்ட முதல்வர்..

By Thanalakshmi VFirst Published May 19, 2022, 1:20 PM IST
Highlights

கோவையில் வ.உ.சி மைதானத்தில் பொருநை கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதில் மயிலாடும்பாறை, கொடுமணல், கீழடி, பொருநை அகழாய்வு குறித்து கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. பின்னர், தொழிலதிபர்கள்‌ மற்றும்‌ தொழில்‌ கூட்டமைப்பினருடன் முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 
 

இதில் பேசிய முதலமைச்சர்,‌  தமிழகத்தை 1 டிரில்லியன்‌ டாலர்‌ பொருளாதாரமாக உயர்த்தும்‌ இந்த அரசினுடைய லட்சியத்தை அடைய, கோவையின்‌ பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைய வேண்டும். புத்தாக்கம்‌, தகவல்‌ மற்றும்‌ தகவல்‌ தொடர்பு தொழில்நுட்பம்‌, வான்வெளி மற்றும்‌ பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும்‌ மேம்பாடு உள்ளிட்ட வளர்ந்து வரும்‌
தொழில்நுட்பங்களுக்கான புதிய மையமாக கோயம்புத்தூர்‌ உருவாக்கப்படும்‌.

இதற்காக தகுந்த ஆலோசகரை நியமித்து, விரிவான திட்டம்‌ ஒன்று தயாரிக்கப்படும்‌. இந்த விரிவான திட்டம்‌, கோவைக்கான புதிய
பெருந்திட்டமாக ஒருங்கிணைக்கப்படும்‌. கோவை நகரின்‌ கட்டமைப்புத்‌ தேவைகளுக்கான எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யக்கூடிய வகையில்‌, இந்தப்‌ பகுதிக்கான புதிய பெருந்திட்டம்‌ உருவாக்கப்படும்‌.

கோயம்புத்தூர்‌ உள்ளிட்ட மேற்கு மண்டலத்தைப்‌ பொறுத்தமட்டில்‌ தொழில்‌ நிறுவனங்களின்‌ நலனைப்‌ பாதுகாத்திடுவதில்‌ அரசு தனிக்கவனம்‌ செலுத்தி வருகிறது. கடந்த நிதியாண்டில்‌, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த 364 குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்களுக்கு ரூபாய்‌ 35 கோடியே 5 இலட்சம்‌ முதலீட்டு மானியம்‌ வழங்கப்பட்டுள்ளது. சுயவேலைவாய்ப்புத்‌ திட்டங்களின்கீழ்‌ 367 தொழில்‌ முனைவோர்களுக்கு 12 கோடியே 2 இலட்சம்‌ ரூபாய்‌ மானியத்துடன்‌ 49 கோடி ரூபாய்‌ கடன்‌ வழங்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌ சொலவம்பாளையம்‌ கிராமத்தில்‌ 42.42 ஏக்கரில்‌ புதிய தனியார்‌ தொழிற்பேட்டை கொசிமா மூலம்‌ அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, தொழிற்பேட்டை அமைக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாநிலம்‌ முழுவதும்‌ கயிறுத்‌ தொழில்‌ குழுமங்களை மேம்படுத்த தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்‌ கோயம்புத்தூரில்‌ அமைக்கப்படும்‌. இதற்கு, முதற்கட்டமாக ரூபாய்‌ 5 கோடி தொடக்க மூலதனமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கோவையை முனையமாக வைத்து செயல்படுத்தப்பட்டு வரும்‌ வான்வழி மற்றும்‌ பாதுகாப்புத்‌ தொழில்‌ பெருவழித்திட்டத்தில்‌, வான்வெளி மற்றும்‌ பாதுகாப்புத்‌ துறை தொடர்பான உற்பத்தியையும்‌ மேற்கொள்ள வேண்டும்‌. சூலூரில்‌ அமைக்கப்பட உள்ள தொழிற்பூங்காவிலும்‌ தொழில்‌ தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்‌.

நூல்‌ விலை உயர்வு மேற்கு மாவட்டங்களில்‌ பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால்‌, பலர்‌ தங்கள்‌ வேலையை இழக்கக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள்‌. கச்சா பொருள்களின்‌ வரலாறு காணாத உயர்வால்‌, பலர்‌ தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில்‌ இருக்கிறார்கள்‌. இதன்‌ தீவிரத்தை உணர்ந்து பிரதமருக்கும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும்‌ ஏற்கனவே கடிதம்‌ எழுதியிருக்கிறேன்‌. இதுதொடர்பாக இன்று மத்திய வர்த்தகத்‌துறை அமைச்சர்‌ பியுஷ்‌ கோயலுடன் தொலைபேசியில்‌ பேசினேன்‌

தொற்காசியாவிலேயே முதலீடுகள்‌ மேற்கொள்வதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கிட வேண்டும்.  அரசு ஏற்படுத்தியுள்ள இந்த வசதி வாய்ப்புகளை தொழில்‌ துறையினர்‌ பயன்படுத்தி, மேன்மேலும்‌ வளர்ச்சி பெற வேண்டும்‌. அதிக முதலீடுகளை மேற்கொண்டு, தயாரிப்புகளை பலப்படுத்துங்கள்‌, பல்வகைப்‌ படுத்துங்கள்‌ - விரிவாக்கத்தை மேற்கொள்ளுங்கள்‌ - மதிப்புக்‌ கூட்டுப்‌ பொருட்களை உற்பத்தி செய்யுங்கள்‌ - என்று முதலீட்டாளர்களுக்கு நான்‌ தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன்‌. இதனால்‌ தமிழ்நாட்டின்‌ பொருளாதாரம்‌ பல்முனைப்‌ பொருளாதாரமாக மாற வேண்டும்‌ என்பதுதான்‌
என்னுடைய இலக்கு என்று முதலமைச்சர் உரையாற்றினார்.
 

மேலும் படிக்க: ஜனநாயகத்தில் நேற்று கருப்பு நாள்.. துணியால் வாயை கட்டிக் கொண்டு கதறிய காங்கிரஸ்.

click me!