
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், குடிசையில் வாழும் மக்கள் 18 பேருக்கு இலவச பட்டா வழங்கியதுடன், அங்கு வீடு கட்டுவதற்கான அரசாணையையும் வழங்கினார். மேலும் கனமழை காரணமாக வீடுகள், கால்நடைகளை இழந்தவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார். வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதனால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பயிர்கள் சேதம் அடைந்தன. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருத்துறைப்பூண்டியில் வயலில் தேங்கிய மழைநீரால் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழுகிப் போனது. மயிலாடுதுறை மாவட்டத்தில் விளைநிலங்களில் தேங்கிய நீர் வடிந்தால் சம்பா பயிர்கள் அழுக தொடங்கியுள்ளது. இதனால் உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை துவங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல் நாகை மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பினால் வயல்கள் குளம் போல காட்சியளிக்கின்றன. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்பட்டது. அதன்படி, சென்னையிலிருந்து இதற்காக புதுச்சேரி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து இன்று காலை காரில் புறப்பட்டு கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம் ஆகிய பகுதிகளை பார்வையிடுகிறார். மயிலாடுதுறைக்கு மாவட்டத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிகிறார். இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்டம் கருங்கனி, அருந்தவபுலம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, தஞ்சாவூர் பெரியக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். இந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டமான கடலூரில் குறிஞ்சிப்பாடியில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிட்டார். கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சுமார் 369 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் அங்கு வாழும் மக்கள் பலர் தங்கள் வீடுகளையும் கால்நடைகளையும் இழந்தனர். இதை அடுத்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்ட நிலையில், குடிசையில் வாழும் மக்கள் 18 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இலவச பட்டா வழங்கினார்.
மேலும் அங்கு வீடு கட்டுவதற்கான அரசாணையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதை தொடர்ந்து கனமழை காரணமாக வீடுகள், கால்நடைகளை இழந்தவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார். இதை அடுத்து மயிலாடுதுறை மாவட்டம் இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளில் பார்வையிடுகிறார். அதன்பிறகு, நாகப்பட்டினம் மாருங்கனி, அருந்தவபுலம் பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம் ராயநல்லூர், புழுதிக்குடி பகுதிகளிலும், மாலை 3.30 மணி முதல் தஞ்சாவூர் மாவட்டம் பெரியக்கோட்டை பகுதியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். முன்னதாக காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் குறித்து ஆய்வுமேற்கொள்ள, அமைச்சர் ஐ.பெரியசாமி பெரியசாமி தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. இக்குழுவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் இடம்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.