விசாரணைக் கைதி மரணம்..!ரூ.10 லட்சம் நிதிஉதவி... தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.! மு.க.ஸ்டாலின் உறுதி

Published : Apr 26, 2022, 03:10 PM IST
விசாரணைக் கைதி  மரணம்..!ரூ.10 லட்சம் நிதிஉதவி... தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.! மு.க.ஸ்டாலின் உறுதி

சுருக்கம்

சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்தது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்  எதிர்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இந்த  தீர்மானத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதில் குற்றம் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சிறையில் மரணம்- சிபிஐ விசாரணை வேண்டும்

தமிழக சட்டப்பேரவையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஒருவர் மரணம் அடைந்தது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னை, புரசைவாக்கம் காவல்நிலையத்தில் விக்னேஷ் உயிரிழப்பு தொடர்பான வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். விக்னேஷின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என  வலியுறுத்தியிருந்தார். இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார் அப்போது  சென்னை மாநகரக் காவல் துறையில் இரவு வழக்கமாக மேற்கொள்ளக்கூடிய வாகனச் சோதனையின் போது, சென்னை பட்டினப்பாக்கம் பகுதியைச் சார்ந்த சுரேஷ் விக்னேஷ் ஆகிய இருவரும் வந்த ஆட்டோவை கெல்லீஸ் அருகிலே காவல் துறையினர் நிறுத்தியிருக்கிறார்கள். கஞ்சா போதையில் இருந்த அவர்களை காவல் துறையினர் விசாரித்தபோது, சரியான பதில் சொல்லாத காரணத்தால், வாகனத்தையும், அவர்களையும் சோதனையிட்டிருக்கிறார்கள். அப்படிச் சோதனையிட்டபோது, அவர்களிடம் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்திருக்கிறது. பிறகு அவர்களை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்திருக்கிறார்கள். ஆனால் விக்னேஷ் மறுத்தது மட்டுமல்ல தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவல் துறையினரைத் தாக்க முயற்சித்திருக்கிறார் அதைச் சமாளித்து, இருவரையும் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஆட்டோவில் இருந்த கஞ்சா மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இவர்களின் பின்புலத்தை FRS என்ற செயலியின்மூலம் ஆய்வு செய்தபோது, சுரேஷ் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 11 வழக்குகளும் விக்னேஷ் மீது ஏற்கெனவே 2 கன்னக்களவு வழக்குகளும் இருப்பது தெரிய வந்திருப்பதாக கூறினார். 

சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்

அடுத்த நாள் காலை அதாவது 19-4-2022 அன்று காலை இருவருக்கும் உணவு வழங்கப்பட்டிருக்கிறது. காலை. உணவு சாப்பிட்டபின், காலை விக்னேஷ்க்கு திடீரென்று வாந்தி வலிப்பு வந்திருக்கிறது உடனே அருகில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து, விக்னேஷ் இறப்பு குறித்து “சந்தேக மரணம்" என முறைப்படி வழக்குப் பதிவு செய்து மேஜிஸ்ட்ரேட் விசாரணை நடைபெற்று வருகிறது விக்னேஷினுடைய உடல் 201-4-2022 அன்று மேஜிஸ்ட்ரேட் அவர்கள் முன்னிலையில் மருத்துவக் குழுவினரால் பிணக் கூராய்வு செய்யப்பட்டிருக்கிறது. இது வீடியோ மூலமும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது பிரேத பரிசோதனை முடிவுற்ற பின்னர் 20-4-2022 அன்றே உறவினர்களிடம் முறைப்படி விக்னேஷினுடைய உடல் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.இந்த வழக்கு சந்தேக மரண வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் உள்ள நிலையில் தலைமைச் செயலக காலனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ் ஊர்க் காவல் படைக் காவலர் தீபக் ஆகியோர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் காவல் துறை இயக்குநர் அவர்கள் மேல் விசாரணைக்காக இவ்வழக்கினை 24-4-2022 அன்று சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்,

ரூ.10 லட்சம் இழப்பீடு

 ஆகவே, விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக அரசு எடுத்து வருகிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகம், காவல் மரணங்கள் தீர விசாரிக்கப்பட்டு அது எவ்வாறானதாக இருந்தாலும், அந்நிகழ்வில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றது. அதே வகையில் இந்த வழக்கும் முறையாக விசாரிக்கப்பட்டு, கடைக்கோடி மனிதனுக்கும் அவர்களின் மனித உரிமை காக்கப்பட்டு, உரிய நீதி கிடைத்திட இந்த அரசும், திராவிட முன்னேற்றக் கழகமும் என்றைக்கும் துணை நிற்கும் என்பதை இந்த அவையில் இருக்கக்கூடிய, இந்த கவன ஈர்ப்பைக் கொண்டு வந்து உரையாற்றியவர்களுக்கு மட்டுமல்ல: இங்கேயிருக்கக்கூடிய எல்லா உறுப்பினர்களுக்கும் இதை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். அடுத்து. இதுகுறித்து சில கோரிக்கைகளை. சில உறுப்பினர்கள் எடுத்து வைத்திருக்கிறீர்கள் எனவே மாண்புமிகு உறுப்பினர்கள் தெரிவித்திருக்கக்கூடியஅந்தக் கருத்துக்களைத் தொடர்ந்து வழக்கினுடைய முடிவுகள் எப்படியிருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் உயிரிழந்த விக்னேஷ் அவர்களது குடும்பத்தினுடைய ஏழ்மை நிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாக 10 இலட்சம் ரூபாய் நிவாரணம் அந்தக் குடும்பத்திற்கு வழங்கப்படும் அதே அடிப்படையில், சுரேஷ் அவர்களது உயர் சிகிச்சைக்கான செலவையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!