இனி எந்த தடையும் இல்லை.. உடனே அமலுக்கு கொண்டு வாங்க.. கோரிக்கை வைத்த அன்புமணி..

Published : Apr 26, 2022, 02:37 PM IST
இனி எந்த தடையும் இல்லை.. உடனே அமலுக்கு கொண்டு வாங்க.. கோரிக்கை வைத்த அன்புமணி..

சுருக்கம்

தமிழகத்தில் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "நடக்கவே நடக்காது என்று பொருளாதார சீர்திருத்தவாதிகளால் வர்ணிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை ராஜஸ்தான் மாநில அரசு வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது. அனைத்து மாநிலங்களின் அரசு ஊழியர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள பழைய ஓய்வூதியத் திட்டம், தமிழகத்தில் எப்போது முதல் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசு ஊழியர்களிடம் எழுந்துள்ளது.இந்தியாவில் 2004ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்தும், தமிழகத்தில் 2003ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்தும் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்தத் திட்டம் அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய சமூக பொருளாதார பாதுகாப்பை அழித்து விடும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடந்த 19 ஆண்டுகளாக பாமக. வலியுறுத்தி வருகிறது. இந்த காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக வாக்குறுதி அளித்தாலும் கூட, அதை நிறைவேற்றவில்லை. 

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2016ம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட சாந்தா ஷீலா நாயர் குழு எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. அதன் பின்னர் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி டிஎஸ் ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அறிக்கையை அளித்தது.

ஆனால், அதன் மீது முந்தைய அரசில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை பெரும் சாபம். அத்திட்டம் நடைமுறைக்கு வந்து 18 ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட அதற்கான விதிகள் இன்னும் முழுமையாகவகுக்கப்படவில்லை. 2004ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்து கடந்த ஆண்டுகளில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காததால் அவர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அரசுப் பணிக்கு சென்றால் இறுதி மூச்சு உள்ளவரை பொருளாதார சிக்கலின்றி வாழலாம் என்பது தான் மக்களின் நம்பிக்கை. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது மக்களின் இந்த நம்பிக்கையையும் தகர்த்து விட்டது. தமிழகத்தில் இந்த நிலை இனியாவது மாற்றப்பட வேண்டும்.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதில் எந்த அரசியல் கட்சிக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட டிஎஸ் ஸ்ரீதர் குழுவின் அறிக்கையும் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அதனால், இந்த விஷயத்தில் புதிதாக ஆய்வு செய்ய எந்தத் தேவையுமில்லை. எனவே, தமிழகத்தில் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்." என்று அன்புமணி கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!