ஒற்றுமையாக இருந்தால் தான் வெல்ல முடியும்.. சூசகமாக நெற்றியடி கொடுத்த முதல்வர்..

By Thanalakshmi VFirst Published Apr 23, 2022, 9:32 PM IST
Highlights

எந்தத்‌ துறையாக இருந்தாலும்‌ அந்த துறை தனித்துச்‌ செயல்பட முடியாதென்றும், ஒற்றுமை உணர்வோடு ஈடுபட்டால்‌ மட்டுமே வெற்றி காண முடியும்‌  என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
 

”டெக் நோ 2022” கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிறைவு விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர், எந்தத்‌ துறையாக இருந்தாலும்‌ அந்த துறை தனித்துச்‌ செயல்பட முடியாது. ஒற்றுமை உணர்வோடு ஈடுபட்டால்‌ மட்டுமே வெற்றி காண முடியும்‌. தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும்‌, முதன்மை மாநிலமாக உருவாக்க சீரிய முயற்சிகளை மேற்கொண்டு, சிறப்பான திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி கொண்டு வருகின்றது.

நம்பர்‌ 1 முதலமைச்சர்‌ என்று சொல்வதைவிட, நம்பர்‌ 1 தமிழ்நாடு என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும்‌. அதற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை எல்லாம்‌ தொடர்ந்து நம்முடைய அரசு நிறைவேற்றி வருகிறது . உயர்‌ கல்வியில்‌ மாணவர்‌ சேர்க்கை விகிதம்‌ என்பது அகில இந்திய அளவில்‌ 27.1 விழுக்காடாக இருக்கிறது. ஆனால்‌ தமிழகம்‌ 51.4 விழுக்காடு பெற்று சிறப்பான இடத்தில்‌ உள்ளது. இந்த ஆண்டு இந்த புள்ளிவிவரத்தை எடுத்தால்‌ 54 விழுக்காடாக கூட கூடியிருக்கலாம்‌.

உயர்கல்வியில்‌ அனைத்து மாணவர்கள்‌ சேர்க்கை விகிதங்களிலும்‌ தமிழகம்‌
முதலிடம்‌ பெற்று முன்னிலையில்‌ இருக்கிறது. உயர்கல்வித்‌ துறையில்‌ செயல்படுத்தப்படும்‌ நலத்திட்டங்கள்‌, தமிழகத்தின்‌ மொத்த மாணாக்கர்கள்‌ சேர்க்கை விகிதத்தின்‌ அதீத வளர்ச்சிக்கும்‌, சமூகத்தில்‌ஒதுக்கப்பட்ட பிரிவு மாணாக்கர்களின்‌ முழுமையான வளர்ச்சிக்கும்‌ சான்றாக உள்ளது. பல்வேறு பன்னாட்டு தொழில்துறை நிறுவனங்கள்‌ தமிழகத்தில்‌ உள்ள பல்வேறு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ பயிலும்‌ பொறியியல்‌ பட்டதாரி மாணவர்கள்‌ வளாகத்‌ தேர்வுமூலம்‌ உயர்‌ நிலை பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்‌.

தற்போதுள்ள நவீன தொழிலகங்களின்‌ எதிர்பார்ப்புகள்‌ மற்றும்‌ எதிர்கொண்டு வரும்‌ சவால்கள்‌ ஆகியனவற்றை கண்டறியவும்‌, தமிழகத்தில்‌ உள்ள பல்வேறு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ பயின்று பட்டம்‌ பெற்ற பட்டதாரி மாணவர்களிடையே, தொழில்நுட்பத்‌ திறன்‌ மற்றும்‌ வேலைவாய்ப்பு பெறுதலுக்கான திறன்களை மேம்படுத்தவும்‌ பல்வேறு திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

‌ “நான்‌ முதல்வன்‌” என்ற திட்டம்‌, நீங்கள்‌ எதை தேர்ந்தெடுத்து, அதிலே வெற்றி பெற வேண்டும்‌ என்று நினைக்கிறீர்களோ, அதிலே முதல்வனாக வரவேண்டும்‌ என்பதற்காகத்‌ தான்‌ நான்‌ முதல்வன்‌ என்று பெயரிட்டு அந்த திட்டம்‌ தொடங்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தின்‌ மாணவ, இளைஞர்களின்‌ அறிவுச்‌ சக்தியை மேம்படுத்துவதுதான்‌ இந்த திட்டத்தின்‌ முக்கியமான நோக்கம்‌ ஆகும்‌.

புதிய தொழில்நுட்பங்களும்‌, புதிய தொழில்நிறுவனங்களும்‌, ஆதரவு அளிக்கின்ற கல்வி மற்றும்‌ தொழில்‌ நிறுவனங்களும்‌ தங்களது தயாரிப்புகள்‌ மற்றும்‌ சேவைகளை கண்காட்சியில்‌ வைப்பதற்கு வாய்ப்புகள்‌ வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய கருத்தரங்குகள்‌, போட்டிகள்‌, திறமைவளர்க்கும்‌ கண்காட்சிகள்‌ மூலம்‌ மாணவர்களை ஊக்குவிப்பதுடன்‌, வருங்காலத்தில்‌ தொழிற்திறன்‌ வாய்ந்த மனிதவளம்‌ மேன்மேலும்‌ அதிகரிக்கவும்‌, பொறியியல்‌ பட்டதாரிகளுக்கு அதிக அளவில்‌ வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும்‌ என்று முதலமைச்சர் பேசினார்.

click me!