இந்த திட்டத்தினால் நமக்கு தான் பேராபத்து.. கண்மூடித்தனமாக உதவி செய்யாதீர்.. எச்சரிக்கும் ராமதாஸ்..

Published : Apr 23, 2022, 06:40 PM ISTUpdated : Apr 23, 2022, 06:44 PM IST
இந்த திட்டத்தினால் நமக்கு தான் பேராபத்து.. கண்மூடித்தனமாக உதவி செய்யாதீர்.. எச்சரிக்கும் ராமதாஸ்..

சுருக்கம்

இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் ஒரு போதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்துவிடக் கூடாது. சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டு இலங்கைக்கு உதவுவதும் தவறு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.  

இது குறித்து இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதற்கு வசதியாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடலுக்கடியில் மின் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுகள் மீண்டும் தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை அரசு உணர வேண்டும்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக மதுரையிலிருந்து இலங்கையின் அனுராதபுரம் பகுதிக்கு கடல் வழியாக மின்பாதை அமைக்கும் திட்டம் நீண்ட காலமாக இரு நாடுகளின் பரிசீலனையில் இருந்து வருகிறது. 2000வது ஆண்டுகளின் பிற்பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் நடந்த போது, அதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதனால் அத்திட்டம் கைவிடப்பட்டது. அதன்பின் 2010ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்தியா - இலங்கை இடையே மின்சார கோபுரங்களை அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், அத்திட்டமும் தமிழ்நாட்டின் ஆதரவு இல்லாததால் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளில் இரு முறை கைவிடப்பட்ட இந்தியா - இலங்கை மின்பாதை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பேச்சுகள் தொடங்கியிருப்பதாகவும், அவை தொடக்க நிலையில் இருப்பதாகவும் இலங்கை அரசின் மின்துறை செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார். இந்த முயற்சி பொதுவாக இந்திய நலனுக்கும், குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பாதகமாக அமையும் என்பதே உண்மை.

சேது சமுத்திரம் திட்டம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கான கனவுத் திட்டம் ஆகும். பல்லாண்டு கால போராட்டத்திற்குப் பிறகு தான் அத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்து தொடங்கப்பட்டது. ஆனால், அத்திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக சேது சமுத்திர திட்டப் பணிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் சேது கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்; இலங்கையை சுற்றிச் செல்லும் பன்னாட்டு சரக்குக் கப்பல்கள் தூத்துக்குடி, ராமேஸ்வரம், வேதாரண்யம், காரைக்கால் வழியாக செல்ல வேண்டும்; அதன் காரணமாக அப்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் தமிழகத்தின் எதிர்பார்ப்பு ஆகும். அது நிறைவேறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆனால், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்கு அடியிலோ, மின் கோபுரங்கள் அமைத்து கடலுக்கு மேலாகவோ மின் பாதை அமைக்கப்பட்டால், அத்துடன் சேதுக்கால்வாய் திட்டத்திற்கு மூடு விழா நடத்தப்பட்டு விடும். இது இந்தியாவுக்கு பாதகமாகவும், இலங்கைக்கு சாதகமாகவும் அமையும். இலங்கைக்கு மட்டுமே பயனளிக்கக்கூடிய மின்பாதை திட்டத்திற்காக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கக்கூடிய சேதுக்கால்வாய் திட்டத்தை எதற்காக இழக்க வேண்டும்? சேதுக்கால்வாய் திட்டம் கைவிடப்படுவதும் இலங்கை அரசுக்குத் தான் லாபமாக அமையும்.

இவை அனைத்தையும் கடந்து இலங்கை போர்க்குற்றங்களை நிகழ்த்திய நாடு, தமிழர்களை இனப் படுகொலை செய்த நாடு, இத்தகைய குற்றங்களுக்காக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணையை எதிர்கொண்டு வரும் நாடு என்பதை மத்திய, மாநில அரசுகள் மறந்து விடக் கூடாது. இலங்கை கடுமையான அரசியல், பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் சூழலில், அந்நாட்டுக்கு கருணை அடிப்படையில் உதவிகளை செய்வது வேறு; அந்நாட்டின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவுவது வேறு என்பதில் இந்தியா தெளிவாக இருக்க வேண்டும். அதேபோல், சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டு இலங்கைக்கு உதவுவதும் தவறு ஆகும்.

இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்துவிடக் கூடாது. பாகிஸ்தானின் பக்கம் இலங்கை சாய்ந்து விடக் கூடாது என்பதற்காக கச்சத்தீவை தாரை வார்த்ததன் விளைவை இப்போது வரை தமிழகம் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல், சேதுக்கால்வாய் திட்டத்தை தாரை வார்த்து இலங்கைக்கு மின்பாதை அமைப்பதன் பாதிப்பையும் தமிழகம் தான் அனுபவிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு இலங்கை - இந்தியா மின்பாதையை மத்திய அரசு கைவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!