அதிமுக விவகாரத்தில் ஸ்டாலின் தலையிட வேண்டும்.. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்ட புது குண்டு!

By Raghupati RFirst Published Jun 21, 2022, 11:20 AM IST
Highlights

AIADMK : ஜெயலலிதா மரணத்துக்கு பின் முதலமைச்சராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக நடத்திய தர்ம யுத்தத்தை தொடர்ந்து, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டர் எடப்பாடி பழனிசாமி.

ஒற்றை தலைமை மோதல்

பல மாதங்களாக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுக 2 பிரிவுகளாக செயல்பட்ட நிலையில், டெல்லியின் தலையீட்டால் 6 மாதத்தில் தர்மயுத்தத்தை நிறுத்திவிட்டு எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவே தொடர, அதிமுகவின் பொதுச்செயலாளராக யாரும் பொறுப்பேற்காமல் இருந்தனர். அதன் பின்னர் கட்சியின் புதிய உயர் பதவியாக ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டு அது ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு எடப்பாடி பழனிசாமிக்கும் வழங்கப்பட்டன.

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிகாலம் நிறைவடைந்து திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வானார். இருப்பினும் அவ்வப்போது எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தரப்புகளுக்கு இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்துக்கு வருவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது. 

எடப்பாடி பழனிசாமி Vs பன்னீர்செல்வம்

அப்போது ஒற்றைத் தலைமை குறித்த விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு உள்ளேயே ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம் செய்துகொண்டனர். இந்நிலையில், பொதுக்குழுவுக்கான தீர்மானத்தை இறுதிசெய்யும் குழுவின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கான தனித் தீர்மானம் இறுதிசெய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படிங்க : 2024 தேர்தல்.. தமிழ்நாட்டுல இருந்து 25 எம்பிக்கள்.. இதுதான் டார்கெட்! திமுகவை அட்டாக் செய்யும் அண்ணாமலை

இதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இன்றைய கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கை முன் கூட்டி விசாரிக்க வேண்டும் என்று, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், திண்டுக்கலை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்தார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றால் கலவரம் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டம்

ஆனால், சூரியமூர்த்தி அதிமுகவை சேர்ந்தவரே இல்லை எனவும், அவரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தை நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தது. இதையடுத்து, அனைத்து மனுதாரர்களும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்தது.

ஓ.பி ரவீந்திரநாத் பேட்டி

இந்த நிலையில் நேற்று இரவு ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும், தேனி தொகுதி எம்பியுமான ஓ.பி ரவீந்திரநாத் நேற்று இரவு சந்தித்து பேசினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பொதுக்குழுவை நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து மூன்று தரப்பினர் முடிவெடுக்க வேண்டும். பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பாளர் முடிவு எடுத்திருக்கிறார். தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு ஒரு முடிவு எடுக்க வேண்டும் .  பொதுக்குழுவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் தமிழக காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும். 

நீதிமன்றத்தினை நாடுவது பற்றி சட்ட வல்லுனர்களும் முடிவெடுத்திருக்கிறார்கள். ஓபிஎஸ்சை யாரும் ஓரங்கட்ட முடியாது. பொதுக்குழு நடக்குமா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள். ஓபிஎஸ் பின்னணியில் சசிகலா இருப்பதாக சொல்லப்படும் அதிமுகவினரின் குற்றச்சாட்டுக்கு அது ஆதாரமில்லாத தகவல் என்று கூறி சென்றார்.

இதையும் படிங்க : AIADMK : வருகிறது இடைத்தேர்தல்.. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமா அதிமுக ? குழப்பத்தில் தொண்டர்கள்!

click me!