செந்தில்பாலாஜியால் ஆண்டுக்கு 44,000 கோடி ரூபாய் நேரடியாகவும் 60,000 கோடி ரூபாய் மறைமுகமாகவும் வருவாய் கிடைத்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஈரோடு, சோலார் புதிய பேருந்து நிலையம் அருகே ஈரோடு மாவட்ட பா.ஜ.க, சார்பில் மத்திய பா.ஜ., அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், மத்தியில் கடந்த 2014ம் ஆண்டு 283 எம்.பி.,க்களுடன் பிரதமர் மோடி தலைமையில் அமைந்த ஆட்சி, 2019ம் ஆண்டில் 303 எம்.பி.,க்களுடன் முழு பலத்துடன் தொடர்கிறது. கடந்த 9 ஆண்டு கால பா.ஜ.க, ஆட்சியில் இந்தியா கடும் வளர்ச்சி கண்டுள்ளது. அதேபோல வரும் 2024ம் ஆண்டிலும் 400க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களுடன் பிரதமராக மோடி தலைமையில் ஆட்சி அமையும்.
அப்போது தமிழகத்தில் 39 எம்.பி.,க்கள் எம்.பி.,க்கள் வெற்றி பெற்று, கேபினெட் அமைச்சர்களாக இடம் பெறுவார்கள். கடந்த 2014ம் ஆண்டு பிரதமரான மோடி முதல் 5 ஆண்டில் இந்தியாவில் அனைவருக்கும் அனைத்து வாய்ப்பு, வேலை, பொருளாதாரம், மாநில அடிப்படையில் சமமாக இல்லை என்பதை அறிந்து, அதனை சமநிலைப்படுத்தினார். இந்தியா அளவில் 18,000 கிராமங்களில் மின் இணைப்பு இல்லாததை அறிந்து முதல் 886 நாளில் மின் இணைப்பு வழங்கினார்.
மேலும் 11 கோடி வீடுகளில் கழிப்பறைகளை கட்டிக் கொடுத்தார். அதில் தமிழகத்தில் 56 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் 9 லட்சம் குடும்பத்தில் காஸ் இணைப்பு இல்லாததை அறிந்து, அனைவருக்கும் உஜ்வாலா திட்டத்தில் காஸ் இணைப்பு வழங்கினார். அதில் தமிழகத்தில் 14 லட்சம் பேர் பயன் பெற்றனர்.
அடுத்த 5 ஆண்டில் காஷ்மீரில் சிவில் சட்டம் 370ஐ கொண்டு வந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். இந்த சூழலில்தான் பொது சிவில் சட்டத்தை நாட்டில் நடைமுறைப்படுத்த முயன்றுள்ளார். இதை தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கின்றன. இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டம் கொண்டு வந்தபோது அம்பேத்கர் பேசிய உரையில், பொது சிவில் சட்டத்தை குறிப்பிட்டுள்ளார். அதை, 1 லட்சம் பிரதி எடுத்து ஸ்டாலினிடம் கொடுக்க உள்ளோம்.
அண்ணன் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொல்ல சதி; தம்பி மீது காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்
இச்சூழலில் இந்தியாவில் பிரிவை ஏற்படுத்தும்படி பாட்னாவில் எதிர் கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி, ஆட்சிக்கு வர திட்டம் வகுக்கின்றனர். செந்தில்பாலாஜி போன்ற ஊழல்வாதிகள் கைதானதும், முதல்வரும், அவரது மகனும் ஓடிச்சென்று காப்பாற்ற முயல்கின்றனர். செந்தில்பாலாஜியை நேரில் சென்று பார்க்காத ஒரே அமைச்சராக பி.டி.ஆர்.பழனிவேல் மட்டுமே உள்ளார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் குற்றவழக்கில் சிக்கிய ஆலடி அருணா, என்.கே.கே.பி.ராஜா போன்றோரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கினார்.
ஆனால், ஸ்டாலின் அதை மறந்து, செந்தில்பாலாஜி இருந்தால்தான் வரும் எம்.பி., தேர்தலில் 234 தொகுதியிலும் வாக்காளர்களுக்காக பட்டி போட முடியும் என திட்டமிடுகிறார். செந்தில்பாலாஜியால் ஆண்டுக்கு 44,000 கோடி ரூபாய் நேரடியாகவும் 60,000 கோடி ரூபாய் மறைமுகமாகவும் வருவாய் கிடைத்தது. அதை இழக்க விரும்பாத ஸ்டாலின், அவரை காப்பாற்றுவதற்காக, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர ஆளுநருக்கு கடிதம் அனுப்புகிறார்.
அவரது அமைச்சரவையில் சிவசங்கர், பொன்முடி, நேரு, சேகர்பாபு, மகேஷ் என ஊழல்வாதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அவை விரைவில் வெளிவரும். மோடி தலைமையிலான, 9 ஆண்டு கால ஆட்சியில் எந்த ஊழல் குற்றச்சாட்டையும் கூற முடியாத அளவுக்கு திறம்பட ஆட்சி தொடர்கிறது. எனவே வரும், 2024லும் மோடி தலைமையிலான ஆட்சி, 400 எம்.பி.,க்களுடன் அமையும் வகையில் பணிகளை செய்ய வேண்டும் என பேசினார்.