
ஊதியம் போதவில்லை என்றால், வேறு வேலைக்கு செல்லுமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறிய நிலையில், நீதிபதிகளின் ஊதிய விவரத்தை சுட்டிக்காட்டி, தங்களுக்கான ஊதியத்தை மட்டும் கேட்டால் தவறா? என தொழிற்சங்கம் சார்பில் போர்டு வைத்துள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 19,500 வழங்க வேண்டும், ஓய்வூதியம், பணிக்கொடை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், வருங்கால வைப்புத்தொகையை உரிய கணக்கில் சேர்க்க வேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த 7000 கோடி நிதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
13வது ஊதிய ஒப்பந்தத்தில் 2.57 மடங்கு ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2.44 மடங்கு என்ற ஊதிய உயர்வு வழங்குவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்றைய முன் தினம் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
அதனால் போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடைவிதித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உடனடியாக போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்பவேண்டும். இல்லையென்றால் பணிநீக்கம் செய்யுமாறு அரசுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஊதியம் போதவில்லை என்றால், வேறு பணிக்கு செல்லுமாறும் தலைமை நீதிபதி காட்டமாக கூறினார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து போக்குவரத்து தொழிலாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தலைமை நீதிபதியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நெல்லை போக்குவரத்து பணிமனை முன்பு ஒரு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியத்தையும் அவர்களுக்கு உயர்வு அளிக்கப்பட்ட பின் புதிய ஊதிய தொகையையும் குறிப்பிட்டு, நீதி எசமானே.. எங்களின் சம்பளத்தை கேட்டால் தப்பா? என தொழிற்சங்கங்கள் சார்பில் தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.