கிறிஸ்தவமும், இஸ்லாமும் உலக மதம்.. இந்து மதம் ஏன் உலக மதமாக மாறவில்லை..? திருமாவளவன் கேள்வி..!

By Asianet TamilFirst Published Oct 17, 2021, 7:43 PM IST
Highlights

உலக அளவிலான மதமாக கிறிஸ்தவம், இஸ்லாமியம் உருவாகியுள்ளது. ஆனால், இந்து மதம் உலக மதமாக ஏன் மாறவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

மதுரையில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் இயற்கை மருத்துவம் தொடர்பான கல்லூரி மருத்துவமனைகள் அதிகரிக்கின்றன. ஆனால், மத்திய அரசு இயற்கை மருத்துவத்துக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இயற்கை மருத்துவத்துக்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் இயற்கை மருத்துவத்துக்கென தனி பிரிவைச் சேர்க்க வேண்டும். இயற்கை மருத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு அளித்தால் அறுவை சிகிச்சைகளும் குறையும்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. 9 மாவட்டங்களில் நடந்த தேர்தல் என்றாலும், ஒவ்வொரு கட்சியின் பலத்தையும் தேர்தல் முடிவு காட்டியுள்ளது. அதிமுக சரிவைச் சந்தித்துள்ளது. திமுகவின் 4 மாத நல்லாட்சிக்கு மக்கள் சான்று அளித்திருக்கிறார்கள். மாநில அளவில் எஸ்சி, எஸ்டி ஆணையத்தை தமிழக அரசு அமைத்திருக்கிறது. எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
சமூக நீதி அரசியலைப் பேசும் மண்ணில் சனாதான சக்திகளுக்குத் துணை போகும் அரசியலை கையில் எடுக்க வேண்டாம் என்று சீமானுக்கு ஏற்கனவே சுட்டிகாட்டியுள்ளேன். மதம் வேறு, ஆன்மீகம் வேறு. மதம் என்பது நிறுவனம், ஆன்மீகம் என்பது உணர்வு. எதிர்பாராத வகையில் நாம் தமிழர் கட்சி, அரசியல் சனாதானவாதிகளுக்கு துணை போகிறது. உலக அளவிலான மதமாக கிறிஸ்தவம், இஸ்லாமியம் உருவாகியுள்ளது. ஆனால், இந்து மதம் உலக மதமாக ஏன் மாறவில்லை? இதுபற்றி இந்து மத தலைவர்கள் சிந்திக்க வேண்டும். சாதியின் பெயரால் பிரிவுகள் கொண்ட மதமாக இந்து மதம் உள்ளதால்தான் உலக நாடுகள் ஏற்கவில்லை. 
ஆர்எஸ்எஸ்காரரர்கள் எங்களுக்கானவர் என்று கூறுவது போல சீமானின் செயல்பாடு மாறிவிட்டது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது ஜனநாயகத்துக்கும் நாட்டுக்கும் பாதுகாப்பு இல்லை. நாட்டை எவ்வாறு காப்பாற்றுவது என்ற அச்சம் உருவாகிவிட்டது. 2024-ஆம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அனைவரும் ஒண்றினைய வேண்டும். சசிகலா அரசியல் வருகை என்பது அவரது தனிப்பட்ட உரிமை, விருப்பம். அதுகுறித்துக் கருத்துச்சொல்ல ஒன்றும் இல்லை” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
 

click me!