#UnmaskingChina: சீனாவிடம் சிக்காத ஜியோ... பி.எஸ்.என்.எல்- ஏர்டெல், ஐடியா நிலைமை என்னவாகும்..?

By Thiraviaraj RMFirst Published Jun 18, 2020, 12:39 PM IST
Highlights

பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 4 ஜி கருவிகளை மேம்படுத்துவதில் சீன உபகரணங்களைப் பயன்படுத்துவதை நிராகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 4 ஜி கருவிகளை மேம்படுத்துவதில் சீன உபகரணங்களைப் பயன்படுத்துவதை நிராகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சீன- இந்திய ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் தமிழகத்தை சேர்ந்த பழனி உட்பட இருபது வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்போது பொதுத்துறை நிறுவனமான  பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4 ஜி நெட்வொர்க்கை மேம்படுத்துவதில் சீன உபகரணங்களை பயன்படுத்துவதை நிராகரிக்க தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான டெண்டரை மறு சீரமைப்பு செய்யவும் நிர்வாகம் தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சீன தயாரிப்புகளை தாங்கள் சார்ந்திருக்கும் நிலைமையை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும் என்கிற தனியார் நிறுவனங்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருகின்றது. தொலைதொடர்பு நிறுவனங்களான பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன், ஐடியா ஆகியவை தங்களது தற்போதைய நெட்வொர்க்குகளில் ஹவாய் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றன. அதே நேரத்தில் இசட்இஇ(ZTE) சீன நிறுவனம் அரசு நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.

சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட சாதனங்களின் நெட்வொர்க் பாதுகாப்பு எப்போதும் சந்தேகத்திற்குரியது என என்று வட்டாரங்கள் என்டிடிவிக்கு தெரிவித்துள்ளன. 2012ம் ஆண்டில், அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் குழு சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தொலைதொடர்பு நெட்வொர்க்குகளிலிருந்து இணைய உளவு அச்சுறுத்தல்களைப் பற்றி எச்சரித்ததுடன், ஹவாய் மற்றும் ZTE நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்யக் கருதும் அமெரிக்க நிறுவனங்கள் வேறு மாற்று நிறுவனத்தின் விற்பனையாளர்களை தேட வேண்டும் என பரிந்துரைத்தது. இந்த குற்றச்சாட்டுகளை சீன நிறுவனங்கள் கடுமையாக மறுத்தன.

முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சீன தொலைத் தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பாளர் ஹவாய், பிஎஸ்என்எல் நெட்வொர்க்கினை ஹேக் செய்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது குறித்து அரசாங்கம் விசாரித்து வருவதாகவும் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிப்ரவரியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இந்தியா பயணத்தின் போது, ​​ரிலையன்ஸ் ஜியோ தனது வரவிருக்கும் 5 ஜி நெட்வொர்க்கில் சீன உபகரணங்களை பயன்படுத்தப்போவதில்லை என முகேஷ் அம்பானி அவருக்கு உறுதியளித்தார். சீன சாதனங்களை பயன்படுத்தாத உலகின் ஒரே நெட்வொர்க் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே. இந்நிலையில் ஜியோ, 4 ஜி மற்றும் 5 ஜி நெட்வொர்க்குகளுக்கு கூட்டாளராக தென் கொரியாவின் சாம்சங்கைக் கொண்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தை பொறுத்த அளவில் 4ஜி மேம்பாடு மிக முக்கியமானதாகும். இதர பல நிறுவனங்கள் அனைத்தும் 4ஜி நெட்வொர்க் வசதியினை மேம்படுத்தியிருந்த போதும், அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி வசதியினை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என பல தரப்பிலிருந்து விமர்சனங்கள் மேலெழுந்திருந்தன. இந்நிலையில் சமீபத்தில் அரசு 4ஜி மேம்பாட்டிற்கு நிதியை வழங்கியது. ஆனால், தற்போது சீன பொருட்களை பயன்படுத்தாமல் 4ஜி வசதியை மேம்படுத்த அரசு அறிவித்திருப்பது பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி வசதியை பெறுவதில் மேலும் சிக்கலை அதிகரித்திருக்கின்றது. பாரதி ஏர்டெல், வோடபோன் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை பன்னாட்டு நிறுவனங்களின் உபகரணங்களைப் பயன்படுத்துகின்றன.

click me!