மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தன்னை சந்தித்துப் பேசும்போது, வார்த்தைக்கு வார்த்தை "குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை" என்று சொல்லி தன்னை புண்படுத்தியதாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் தெரிவிக்கிறார்.
அமைச்சரின் இதுபோன்ற செயல் நீதிக்கும், நியாயத்திற்கும் புறம்பான செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. இதிலிருந்து விசாரணை அறிக்கை என்பது ஒருதலைபட்சமானது என்பது தெளிவாகிறது என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஏழையெளிய, நடுத்தர மக்களுக்கு இலவசமான மற்றும் தரமான மருத்துவ சேவையை வழங்குவதும், மருத்துவமனைகளை மேம்படுத்துவதும், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பில் இருப்பதை உறுதி செய்வதும் மாநில அரசின் தலையாய கடமையாகும். ஆனால், தமிழ்நாட்டிலேயே இதற்கு முற்றிலும் முரணான நிலைமை நிலவுகிறது. நல்ல முறையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை பாதிப்புக்கு உள்ளாக்கியதுதான் திமுக அரசின் சாதனை! இதுதான் திராவிட மாடல் போலும்!
இதையும் படிங்க;- ஏழை குழந்தைனா அலட்சியமா? தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் லட்சணம் இதுதான்! இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்!
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் மற்றும் அஜிஷா ஆகியோரின் ஒன்றரை வயது மகன் முகமது மகிர் தலையில் நீர் என்பதற்காக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் தலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக மீண்டும் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தையினுடைய கைகளின் நிறங்கள் மாறியதாகவும், இதனை செவிலியர்களிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்றும், பின்னர் ‘கை அழுகியுள்ளது’ என்று தெரிவித்து கையை அகற்ற வேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், குழந்தைக்கு இந்த நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம்தான் என்றும், தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் குழந்தையின் தாய் பேட்டி அளித்துள்ளார்.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா? இதோ லிஸ்ட்..!
இதுகுறித்து கருத்து தெரிவித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், இது மருத்துவர்களின் அலட்சியம் என்று கூற முடியாது, விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கும் அமைச்சர், விசாரணைக் குழுவின் முடிவிற்கு முன்பே இதனை மருத்துவர்களின் அலட்சியம் என்று கூற முடியாது என்ற அறிவிப்பு விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும். விசாரணைக் குழு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை அமைச்சர் விசாரணைக்கு முன்பே சூசகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார். இந்த நிலையில், அமைச்சர் என்ன கருத்தினைத் தெரிவித்தாரோ அதற்கேற்ப, ‘மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது தவறில்லை’ என்று விசாரணைக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அமைச்சரின் இதுபோன்ற செயல் நீதிக்கும், நியாயத்திற்கும் புறம்பான செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. இதிலிருந்து விசாரணை அறிக்கை என்பது ஒருதலைபட்சமானது என்பது தெளிவாகிறது.
இதையும் படிங்க;- குழந்தை கை இழந்த விவகாரம்: விசாரணை அறிக்கை வெளியீடு!
மேலும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், தன்னை சந்தித்துப் பேசும்போது, வார்த்தைக்கு வார்த்தை "குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை" என்று சொல்லி தன்னை புண்படுத்தியதாக பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் தெரிவிக்கிறார். மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக தன் ஒன்றரை வயது மகனின் கை அகற்றப்பட்டு, மனம் நொந்து போயுள்ள நிலையில், குழந்தையின் தாய்க்கு ஆறுதல் கூற வேண்டிய அமைச்சர் மனம் புண்படும்படி பேசுவது என்பது மனித நேயமற்ற செயல். இதுவும் கடும் கண்டத்திற்குரியது.
சென்னை தலைமை மருத்துவமனையிலேயே இதுபோன்ற நிலை இருந்தால், மாவட்ட மருத்துவமனைகளின் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இந்தத் தவறுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டுமென்றும், இந்தத் தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு காரணமாக குழந்தையின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் ஓபிஎஸ் கூறியுள்ளார்.