
தமிழகத்தில் 4805 கோடி ரூபாய் அளவிற்கு, 97 சதவீத நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். தற்போது வரை 12 லட்சத்து 19 ஆயிரத்து 106 பயணிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமானது ஆட்சிக்கு வந்தால் நகைக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்பதுதான். 5 சவரனுக்கும் குறைவான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆட்சி பொறுப்பேற்று 10 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது 97% கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் நகைக்கடன் ரத்து தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 5 சவரன் நகை வரை அடகு வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், 6 ஆயிரம் கோடி அளவுக்கு நகைகளுக்கு தள்ளுபடி செய்யப்படும், இதில் உண்மையிலேயே ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இருக்கும் என அவர் கூறினார்.
இந்த அறிவிப்பு 2021 மார்ச் 31 வரை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் ஒரே குடும்பத்தில் அதிகமானோர் அடகு வைத்திருந்தால் கலையப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் சொன்னது போல நகை கடன்களை உடனே ரத்து செய்ய முடியவில்லை, அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. நகைகள் அடமானம் வைக்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் இருந்ததாக தெரியவந்தது. இதில் இருந்த முறைகேடுகள் அனைத்தையும் அடையாளம் கண்டு, அதை ஒழுங்குபடுத்தி உண்மையிலேயே தகுதியுடையவர்கள் யார் என பட்டியல் தயாரித்து அதன் அடிப்படையில் தற்போது நகை கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு திரும்பத் திரும்ப கடன் பெற்றதும் தெரியவந்தது.
நகைக்கு பதிலாக வேறு ஏதேதோ பொருட்களை கொடுத்தும் நகைக் கடன் பெற்றது தெரியவந்தது இப்படி பல குளறுபடிகளை கலைந்து, தற்போது நகை கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 4205 கோடி ரூபாய் அளவில் 97% நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக தகுதியான நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கு சான்றிதழ் மற்றும் நகைகள் பயனாளிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 14,51,042 பயனாளிகளுக்கு 5296 கோடி அளவிற்கு 5 சவரனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் தற்போது வரை தகுதியுள்ள 12 லட்சத்து 19 ஆயிரத்து 106 பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதாவது, தகுதி வாய்ந்த 97 சதவீதம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளதாகவும், மீதம் உள்ள பயனாளிகளுக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பயிர்க் கடன் அடிப்படையில் பத்தாயிரம் கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் பெரியசாமி கூறினார்.