சமூக நீதி அரசு என்பதை மீண்டும் நிரூபித்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்.. தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டு.

By Ezhilarasan BabuFirst Published Aug 16, 2022, 7:10 PM IST
Highlights

தேசியக்கொடி கொடி ஏற்றப்பட்டதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தமிழக அரசுக்கு  பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த  அமைப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. 

தேசியக்கொடி கொடி ஏற்றப்பட்டதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தமிழக அரசுக்கு  பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த  அமைப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- 

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள ஆய்வு அறிக்கையை தொடர்ந்து தமிழக அரசு உறுதியான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தது. அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 20 ஊராட்சிகளில் மட்டுமல்ல அனைத்து தனி ஊராட்சிகளிலும் தலித் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்வதற்காக  சிறப்பு ஆணையை வெளியிட்டது.

அனைத்து தனி ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் தேசிய கொடி ஏற்றுவது குறித்த குறுஞ்செய்தியும் தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலையிட்டு உறுதி செய்திருக்கிறார்கள். இது போன்ற முயற்சிகளினால் தமிழ்நாடு முழுவதும் தனி ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசின் உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பாராட்டுகிறது. அதே நேரத்தில் நமது கவனத்திற்கு வந்த தகவல்களின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் சேந்தங்குடி ஊராட்சி கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஊராட்சிமன்றத் தலைவர் திரு.தமிழரசன் அவர்களால் இன்று கொடியேற்ற முடியவில்லை.

இந்த ஊராட்சியில் பிரச்சனை இருந்ததை ஆலங்குடி வட்டாட்சியரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக புகார் கொடுக்கப்பட்டது. வட்டாட்சியர் கிராமத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் கூட ஊராட்சி மன்ற தலைவர் திரு.தமிழரசன் அவர்களை கொடியேற்ற விடாமல் தலைமை ஆசிரியரே தேசியக் கொடியை ஏற்றி இருக்கிறார்.

இப்பிரச்சினையில் தமிழ்நாடு உரிய தலையீடுகள் செய்து ஊராட்சித் தலைவர் திரு தமிழரசன் அவர்கள் கொடியேற்றுவதை ஓரிரு நாட்களில் உறுதி செய்து மீண்டும் கொடியேற்ற வைத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதாவது, நாடு 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் தலித் ஊராட்டி மன்றத் தலைவர்கள் தேசிய கொடி ஏற்ற முடியாத நிலை உள்ளது என்றும், 22 ஊராட்சிகளில் தலித் தலைவர்கள் அமர இருக்கைகள்கூட வழங்கப்படுவதில்லை என்றும், தமிழகத்தில் சமூக நீதி அரசு நடக்கிறது என சொல்லிக் கொள்ளும் திமுக ஆட்சியிலும் இந்த அவலம் தொடர்கிறது என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி குற்றஞ்சாட்டியிருந்தது. 

அதைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் சுதந்திர தின விழாவுக்கு முன்னர் அனைத்து ஊர்களிலும் பட்டியல் இன ஊராட்டி மன்ற தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். இந்நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழக அரசு எடுத்த உறுதியான நடவடிக்கையை பாராட்டி இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 

click me!