சிங்கப்பூர், ஜப்பானுக்கு 9 நாள் பயணமாக புறப்பட்ட ஸ்டாலின்.! உற்சாகமாக வழியனுப்பி வைத்த அமைச்சர்கள், அதிகாரிகள்

By Ajmal Khan  |  First Published May 23, 2023, 11:10 AM IST

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றார். 


சிங்கப்பூர், ஜப்பான் பயணம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு இன்று புறப்பட்டு சென்றார். அவருக்கு சென்னை விமான நிலையித்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக இந்த பயணம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் துபாய் பயணத்தின் போது 6100 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.  சுமார் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரண்டு லட்சத்து 95 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Latest Videos

undefined

தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கும் ஸ்டாலின்

4லட்சத்து  65 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணத்தின் போது நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தவர், இந்த பயணம் பயணம் வெற்றிகரமாக முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், 23.5.2023 அன்று சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்று. அந்நாட்டின் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு ஈஸ்வரன் அவர்களையும், மாண்புமிகு உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.கே.சண்முகம் அவர்களையும் மற்றும் அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக் (Temasek), செம்கார்ப் (Sembcorp) மற்றும் கேப்பிட்டாலாண்டு இன்வஸ்மன்ட் (CaptiaLand Investment) அதிபர்கள் / முதன்மைச் செயல் அலுவலர்களையும் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

இதனையடுத்து இன்று  மாலை நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) பேம்டிஎன் (FameTN), டான்சிம் (TANSIM) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) ஆகியவை சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகமான SUTD (Singapore University of Technology & Design), சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு SIPO (Singapore India Partnership Office) மற்றும் சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு-SICCI (Singapore Indian Chamber of Commerce and Industries) ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலைநிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

ஜப்பான் நிறுவன அதிபர்களோடு ஆலோசனை

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு, இந்திய அளவில் முன்னணி மாநிலங்களுள் ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக, ஜப்பானிய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. ஜப்பான் நாட்டின் தலைசிறந்த நிறுவனங்க முன்னணியில் இருக்கக்கூடிய நிசான் நிறுவனம், ரெனால்ட் நிறுவனத்துடன் இணைந்து சமீபத்தில் 3300 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் முதலீடு செய்தது மட்டுமல்லாமல் தனது தொழில் நடவடிக்கைகளை நம்மாநிலத்தில் மேலும் விரிவாக்கம் செய்து வருகிறது.

இந்த உறவை மேலும் மேம்படுத்தும் வகையில்தான், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதலீட்டுக் குழுவுக்கு தலைமை தாங்கி ஜப்பான் செல்கிறார்கள். அங்கு முன்னணி தொழில்துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அழைப்பு விடுக்க இருக்கிறார்கள். ஜப்பான் நாட்டில், ஒரு முதலீட்டு ஊக்குவிப்பு மாநாடும் நடைபெற உள்ளது. பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட உள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

ஒசாகாவில், ஜப்பான் வெளியுறவு வர்த்தக நிறுவனமான, ஜெட்ரோ (JETRO) நிறுவனத்துடன் இணைந்து அங்கு நடைபெற உள்ள முதலிட்டாளர்கள் மாநாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். மேலும் முக்கிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்க உள்ளார்கள். அதனைத் தொடரந்து ஒசாகா வாழ் இந்திய சமூகத்தினர் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் 200க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்துகொள்கிறார்கள். கியோகுடோ மற்றும் ஓம்ரான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளபடஇருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

சிபிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்- தனியார் பள்ளி இயக்குனர் அதிரடி உத்தரவு

click me!