நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் வியூகம் வகுக்க நாளை எதிர்கட்சிகளின் கூட்டம் பாட்னாவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை விமானம் மூலம் பீகார் செல்கிறார்.
பாஜகவை வீழ்த்த வியூகம்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலங்களே உள்ள நிலையில், பாஜகவிற்கு எதிராக நாட்டில் உள்ள எதிர்கட்சிகள் ஒன்றினைய திட்டமானது வகுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல முறை எதிர்கட்சிகள் ஒன்றினைந்து ஆலோசனை நடத்தியுள்ளன. ஆனால் இந்த கூட்டங்களில் முடிவு எட்டப்படாமல் கூட்டமானது ஒத்திவைக்கப்பட்டது. குறிப்பாக பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்வியால் எதிர்கட்சிகளுக்குள் ஒரு மித்த முடிவு எடுக்கமுடியாத நிலையானது உருவாகியுள்ளது. இந்தநிலையில் 2 முறை வெற்றி பெற்று அசூர பலத்தோடு இருக்கும் பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியும் தனது கோரிக்கைகளை தளர்த்தி கொள்ள வேண்டும் என எதிர்கட்சிகள் சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாட்னாவில் கூடும் எதிர்கட்சிகள்
இதனிடையே மக்களவை தேர்தலில் பாஜக.,வுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இறங்கியுள்ளார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதால் தங்கள் கட்சியின் பிரதிநிதிகளை அனுப்பாமல் கட்சி தலைவர்களே பங்கேற்க வேண்டும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக தலைவரும் தமிழக முதலமைச்சரமான மு.க ஸ்டாலின் இன்று மாலை பீகார் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ் வாடி தலைவர் அகிலேஷ் யாதவ்,
முக்கிய முடிவு எட்டப்படுமா.?
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேம்நாத் சோரன், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் பாஜகவை வீழ்த்த எடுக்க வேண்டிய திட்டம், மாநிலத்திற்குள் கூட்டணி பங்கீடு, பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட குறைந்த பட்ச செயல்திட்டமானது வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்குமா? அல்லது கருத்து வேறுபாடு காரணமாக கடைசி நேரத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்காமல் விலகுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்