பா.ஜ.க ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாகவும், இதனால் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கவலை இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒரு கோடி மகளிர் பயன் பெறும் திட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு- தொ.மு.ச பேரவையின் முன்னாள் துணை தலைவர் வி.எம்.ஆர்.சபாபதி அவர்களின் இல்ல திருமண விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், "காலை சிற்றுண்டி, பெண்களுக்கு இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை உதாரணம் என தெரிவித்தார். இதனால் சிலருக்கு ஆத்திரம் பொறாமை ஏற்பட்டுள்ளதாக கூறினார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் சுமார் 1 கோடி மகளிர் பயன்பெற உள்ளனர்.
15 ரூபாய் கூட கொடுக்கவில்லை
இது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர்கள் வாய்க்கு வந்த படி பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என கூறினார். 2014 ல் பா.ஜ.க. கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் கருப்பு பணத்தை மீட்போம், வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்துவோம், ஆண்டுக்கு 2 லட்சம் வேலை வாய்பை உருவாக்குவோம் என வாக்குறுதி கொடுத்தார்கள். ஒன்றையாவது நிறைவேற்றினார்களா என கேள்வி எழுப்பியவர், 15 ரூபாய் கூட மக்களுக்கு கொடுக்கவில்லையென விமர்சித்தார். இப்படிப்பட்ட சர்வாதிகார ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக கூறிய அவர், யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட யார் ஆட்சி இருக்க கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என கூறினார்.
ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் கவலை இல்லை
சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே எதிர்கட்சிகள் ஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்றியதாக கூறினார். பீகாரை தொடர்ந்து எதிர்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூரில் நடைபெறவுள்ளது. இதையெல்லாம் பார்த்து எரிச்சல் படும் பிரதமர், பிரதமர் என்ற நிலையை மறந்து ஏதேதோ பேசுகிறார் உளறுகிறார். இதெற்கெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ.க அரசை அப்புறப்படுத்தும் முயற்சியில், எந்த சூழ்நிலை வந்தாலும், ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் இம்மியளவும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும்,
தேர்தல் வெற்றி- முழுமையாக ஈடுபடுங்கள்
ஒரே கொள்கையோடு நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான முயற்சியிலே முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற அடிப்படையிப் களத்தில் இறங்கி இருக்கிறோம் என பேசினார். திருமண விழாவில், திராவிடர் கழக தலைவர் வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் கோபண்ணா, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் திமுக முன்னோடிகள் , நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இதையும் படியுங்கள்