கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி!!

By karthikeyan VFirst Published Aug 8, 2018, 7:17 AM IST
Highlights

கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதையடுத்து அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டு காவேரி மருத்துவமனையிலிருந்து இரவு 9.30 மணியளவில் அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கருணாநிதியின் குடும்பத்தினரும் உறவினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் உடலுக்கு திமுக  பொதுச்செயலாளர் க.அன்பழகன், திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் கருணாநிதியின் உடல் சிஐடி காலனிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி ஹாலில் ஏராளமான தொண்டர்கள் திரண்டுள்ளனர். 

கருணாநிதியின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். தினகரன், ரஜினிகாந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டப்பேரவை தலைவர் தனபால், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, காமராஜ் ஆகியோர் கருணாநிதியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஸ்டாலினிடம் இரங்கலையும் தெரிவித்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் இழப்பு தமிழகத்திற்கே பேரிழப்பு என்று கூறினார். மேலும் கருணாநிதியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திமுக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கொண்டார். 
 

click me!