
கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக உட்கட்சி விசயங்களை எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர் செல்வமும் பேசுகிறார்கள். சசிகலா வருகை குறித்து நான் கருத்து சொன்னால், அது தவறாக இருக்கும். இந்தியாவில் யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். இந்த விவகாரத்தை அந்த கட்சிக்குள் பேசிக்கொள்கிறார்கள். இதுப்பற்றி நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. எங்களைப் பொறுத்தவரை யார் திட்டினாலும் சரி பாராட்டினலும் சரி ஆதாரங்களோடு செய்யுங்கள்.
திமுகவை பாஜகவும் விமர்சிக்கிறது. அதிமுகவும் விமர்சிக்கிறது. எடப்பாடி பழனிசாமிகூட சமீபத்தில் திமுக அரசைக் கண்டித்து அறிக்கை கொடுத்தார். நாங்கள் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படுகிறோம். சில இடங்களில் நாங்கள் சொல்வதை தமிழக முதல்வர் கேட்டுக்கொள்கின்றார். கோவில்கள் திறப்பு, ஆவின் டெண்டர் போன்றவற்றை தமிழக முதல்வர் ஏற்றுக்கொண்டார். தமிழகத்தில் திமுக பேசுவது எல்லாமே பாஜகவை எதிர்த்துதான். திமுக-பாஜக இடையேதான் கருத்தியல் ரீதியான அரசியல் நடைபெறுகிறது. தமிழகத்திலிருந்து எழும் கருத்துகளை அதிமுகவினர் முன் வைக்கிறார்கள். தேசம் தொடர்பாக பாஜக கருத்து தெரிவிக்கிறது. இங்கே யார் எதிர்கட்சி என்று அதிமுக-பாஜக இடையே போட்டி இல்லை. ஒன்றாகவே இருக்கிறோம்.
தமிழ்நாடு மின் வாரியத்தில் ஊழல் நடக்க போகிறது. அதைத்தான் சுட்டி காட்டினோம். ஆனால், கண்ணாடி மாளிகையில் அமர்ந்து அமைச்சர் கல் எறிகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி வாயிலிருந்தே ஆதாரம் வரும். எல்லா உண்மைகளும் வெளிவரும். இந்த விஷயத்தில் திமுக-பாஜக இடையே கருத்து மோதல்கள் இல்லை. கொடுத்த ஆதாரங்களுக்கு பதில் வரவில்லை. இனி அவர்கள் சுதாரித்து கொள்வார்கள் என நினைக்கிறேன். முதல்வர் நிச்சயமாக கண் வைத்து இருக்கிறார். நடவடிக்கை எடுப்பார். மின்துறை மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.