நாளை டிஸ்சார்ஜ்.. தமிழக மக்களின் அன்புக்கு நன்றி.. நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின் !

By Raghupati RFirst Published Jul 17, 2022, 9:31 PM IST
Highlights

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து சென்னை காவேரி மருத்துவமனையில் முதலமைச்சருக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டது. இந்தநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.  

அதில், 'மக்களின் அன்பு..! மருத்துவர்களின் கனிவு..! நலமுடன் தொடர்கிறேன் பணியினை! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும் தமிழ்நாட்டுப் பொதுமக்களுக்கும் உங்களில் ஒருவன் எழுதும் மடல். கொரோனா தொற்றினால் நான் பாதிக்கப்பட்டசெய்தி அறிந்ததிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும்நலம் பெற வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

மேலும் செய்திகளுக்கு..3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கப்போகுது.. மக்களே உஷார் !

நலமடைந்துவிட்டேன் என்ற நல்லசெய்தியுடன் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழமைக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களும் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு நலன் விசாரித்தனர்.பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கடிதம் மூலமாக நலம் விசாரித்தனர். அந்தக் கடிதங்களை எல்லாம் தொடர்ந்து படித்து வருகிறேன். மருத்துவர்கள் அளித்த சிகிச்சையுடன் அந்தக் கடிதங்களும் உடலுக்கும் மனதுக்குத் தெம்பு தந்தது. 

நாளை (திங்கட்கிழமை) டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள். இருப்பினும், ஒருவார காலத்திற்கு வீட்டில் இருந்து ஓய்வெடுக்கவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டில் இருக்க சம்மதித்தாலும், ஓய்வில் இருந்திட மனம் ஒப்பவில்லை. உங்களில் ஒருவனான என்னை நம்பி, தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள பெரும் பொறுப்பினை உணர்ந்து, முதலமைச்சர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய பணிகளை, கவனிக்க வேண்டிய கோப்புகளை, எடுக்க வேண்டிய முடிவுகளை, செயல்படுத்த வேண்டிய திட்டங்களை வீட்டில் இருந்தாலும் கவனித்தபடிதான் இருப்பேன். 

திங்கட்கிழமையன்று குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெறுவதால், அதற்கான ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு நேரில் சென்று வாக்களித்துவிட்டுத் திரும்ப வேண்டிய நிலையில் இருக்கிறேன். 'தமிழ்நாடு நாள்' என ஆண்டுதோறும் கொண்டாடத் தீர்மானித்திருப்பதால், சென்னை கலைவாணர் அரங்கில் ‘தமிழ்நாடு திருநாள்’ என்ற நிகழ்வு திங்கட்கிழமையன்று நடைபெறுகிறது.  44-ஆவது செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். 

மேலும் செய்திகளுக்கு..என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? பதவி தான் முக்கியமா? திமுகவை பொளந்த அண்ணாமலை

செஸ் ஆட்டத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்திடும் வகையில் முன்னோட்ட நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணொலியும் வெளியிடப்பட்டு இளைஞர்கள், மாணவர்களிடம் செஸ் விளையாட்டு குறித்த விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. திருச்சியில் 2140 பேர் கலந்துகொண்ட செஸ்போட்டி உலக சாதனை புரிந்திருக்கிறது. மாண்புமிகு இந்திய ஒன்றியத்தின் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் சூலை 28 அன்று சென்னை நேரு விளையாட்டரங்கில் இந்த நிகழ்வினைத் தொடங்கிவைத்துச் சிறப்பிக்க இருக்கிறார். 

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற செஸ்சாம்பியன்களும், இளம் வீரர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். அதற்கான ஆயத்தமும் ஆர்வமும் இப்போது வெளிப்படத் தொடங்கியிருப்பதைக் காண முடிகிறது. ‘வருக.. வருக.. தமிழ்நாட்டுக்கு வருக…’ என 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அமைந்த முன்னோட்டக் காணொலியைத் தொடர்ந்து, அதன் முழுப் பாடலும் அடங்கிய காணொலி விரைவில் வெளிவர இருக்கிறது. 

ஆளுங்கட்சி என்ற முறையில் கழகத்தினர் ஒவ்வொருவருக்கும் கூட அந்தப் பொறுப்பு இருக்கிறது. உயர்ந்த இலட்சியத்தை அடைய வேண்டுமென்றால் அதற்கான உழைப்பைக் கொடுத்தே ஆக வேண்டும். நம் பாதையில் நாம் உறுதியாகப் பயணிப்போம். சில அரைவேக்காடுகள் குறுக்கும் நெடுக்குமாக விமர்சனச் சேற்றை வீசியபடி ஓடும். நாம் சற்று ஒதுங்கிக் கொண்டு, அவற்றைக் கடந்து செல்ல வேண்டும். நம்மைத் தாக்கி, அதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள நினைக்கும் வீணர்களுக்கு நாம் இடம் தரக்கூடாது. 

அரசியல் பாதையில் குறுக்கிடும் அத்தகைய பேர்வழிகளை, இடக்கையால் புறந்தள்ளி நாம் முன்னேறிச் செல்வோம். நான் ஏற்கனவே திருவண்ணாமலையில் சொன்னபடி 'I Don't care' என்று அவர்களை அலட்சியப்படுத்துங்கள். வம்படியாகப் பேசி விளம்பரம் தேடிக்கொள்ள நினைப்போரைத் தவிர்த்து, நம் வழியில் பயணிப்போம். மக்களுடன் நாம் எப்போதும் இருப்போம். மக்கள் நம்முடன் எப்போதும் இருப்பார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும் செய்திகளுக்கு..பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது.. மெட்ரிகுலேசன் இயக்குநரகம் எச்சரிக்கை !

click me!