ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு... எதற்காக தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published May 15, 2021, 6:25 PM IST
Highlights

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சற்று முன் நேரில் சந்தித்தார். 

தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 15.3 லட்சமாக உள்ளது. சுமார் 2 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா 2வது அலையை சமாளிக்கும் விதமாக மே 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை, 5 கோடி தடுப்பூசி வாங்க உலக அளவில் டெண்டர், கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி காட்டி வருகிறார். 

அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் அரசுக்கு ஆதரவாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு உதவ வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், தனியார் அமைப்புகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலமாக நிதி உதவிகள் குவிந்து வருகிறது. 

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சற்று முன் நேரில் சந்தித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். கொரோனா பேரிடர் காலத்திற்கு உதவும் விதமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 

click me!