அறிவாலயத்திற்கு செல்லும் போதெல்லாம் இன் முகத்தோடு வரவேற்பீர்களே..! முன்னாள் எம்.பி மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்

By Ajmal KhanFirst Published Dec 22, 2022, 12:45 PM IST
Highlights

முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமானடாக்டர் மஸ்தான் மறைவுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக நிர்வாகி மரணம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்தான் இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.இதனையடுத்து அவரது மறைவிற்கு திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவரரும், முதலமைச்சருமான  மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் மறைவெய்தினார் என்ற துயர்மிகு செய்தி கேட்டு  அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது தனி மரியாதையும், பற்றும் பாசமும் மிகுந்தவராக தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பயணித்து வந்த டாக்டர் மஸ்தான் அவர்கள் என்றைக்கும் இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிய செயல்வீரர்!

முன்னாள் எம்பி திடீர் மரணம்..! அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளராக - அந்த அணியின் பணி சிறக்க தன்னை முழு மூச்சாக அர்ப்பணித்துக் கொண்டவர். இப்தார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து மிகச் சிறப்புற நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே!சிறுபான்மையினர் நலன் மட்டுமின்றி, அனைத்துச் சமுதாய நலனிற்காகவும் முன்னின்று செயலாற்றும் ஒப்பற்ற ஒரு களப் பணியாளரை இன்றைக்கு நான் இழந்து  தவிக்கிறேன்.அண்ணா அறிவாலயம் செல்கின்ற நேரங்களில் எல்லாம் அங்கே நின்று என்னை இன்முகத்துடன் வரவேற்கும் அவர் சில நாட்களுக்கு முன்புதான் என்னை இல்லத்தில் நேரில் சந்தித்து தனது மகனின் நிச்சயதார்த்தத்திற்கு அன்போடு அழைத்தார்.

மனித நேயராக, சமூக சேவகராக - தீவிர கழகத் தொண்டராக பணியாற்றிய டாக்டர் மஸ்தான் அவர்களின் மறைவு  ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - கழகத்தினருக்கும் - சிறுபான்மையினச் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அனுதாபத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிமுக கட்சி கொடியை ஓபிஎஸ் பயன்படுத்துவதா.! களத்தில் இறங்கிய இபிஎஸ்.! வக்கீல் நோட்டீஸ் அனுப்பி அதிரடி
 

click me!