பெரும்பான்மையை நிரூபிக்க கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் படத்தை அன்பளிப்பாக வழங்கினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை இழந்து விட்டதாகவும், அவரை பெரும்பான்மையை நிரூபிக்க கோரி உத்தரவிட வேண்டும் எனவும் எதிர்கட்சி தரப்பிலும் டிடிவி தரப்பிலும் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்த தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது. இதனால் தமிழக முதலமைச்சர் கோவில் கோவிலாக சென்று தரிசனம் செய்து வருகிறார். இதனிடையே நாகையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவில் கலந்துகொள்ள சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மஹா புஷ்கரத் திருவிழாவில் கலந்துகொண்டு காவிரியில் புனிதநீராடினார். அமைச்சர்களும் புனித நீராடினார்கள்.இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். அங்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முதல்வர் பழனிசாமியை வரவேற்றனர். இன்று காலை நடைபெற்ற சிறப்பு ஆராதனை சேவையில் முதல்வர் பங்கேற்றார். அப்போது, தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் புகைப்படத்தை முதலமைச்சர் எடப்பாடிக்கு வழங்கினர்.