முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு... 1 கோடியே 89 லட்சம் குடும்பங்களுக்கு பயன்... தயாராகுங்கள் மக்களே..!

By Thiraviaraj RMFirst Published Apr 22, 2020, 12:14 PM IST
Highlights

இந்த நடைமுறையை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

ரேசன் கடைகள் மூலம் மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் கொடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கரோனா நோய்த் தொற்றினைத் தடுக்க நாட்டிலேயே முதன்முதலாக, தமிழக அரசு மாநிலம் முழுவதற்குமான முழு ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்தது. ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்குத் தகுந்த நிவாரணம் வழங்க ஊரடங்கு உத்தரவு காலம் ஆரம்பிக்கும் முன்னரே, 3,280 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க ஆணையிட்டது. அதில், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் விலையின்றி வழங்க உத்தரவிடப்பட்டது. இன்று வரை 1 கோடியே 89 லட்சத்து 1,068 குடும்பங்களுக்குப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல, 15.4.2020 அன்று முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதற்கு முன்பே, 13.4.2020 அன்று தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாய விலைக் கடைகளில், விலையின்றி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், வருகின்ற 24.4.2020 மற்றும் 25.4.2020 ஆகிய நாட்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கன்களில் அத்தியவசியப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் தத்தமது நியாய விலை கடைகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த நடைமுறையை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை விலையில்லாமல் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!