
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஜுரம் இப்போது எல்லாப் பக்கங்களிலும் பிடித்துக் கொண்டு விட்டது. அதற்கான அரசியல் களச் சூழல் அப்படி ஆகிவிட்டது. இரட்டை இலைச் சின்னம் வந்ததால்தான் இடைத்தேர்தல் அறிவிப்பே - என்ற ரீதியில் தினகரன் அணியினர் சொல்லிக் கொண்டிருக்க, தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகப் பார்வையை வீசிக் கொண்டிருக்கிறார்கள் தினகரன் அணியினர்.
ஆனால், சென்ற முறை போல இப்போதும், பணப் பட்டுவாடா புகுந்து விளையாடும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். எந்தக் காரணத்தால் தேர்தல் நிறுத்தப் பட்டதோ அதே காரணத்தை இப்போது தடுக்க முடியாது என்ற ரீதியில் சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து ஒரு பேட்டி அளித்தார். அதில், பணப் பட்டுவாடாவைத் தடுக்க புதிய நடைமுறை பின்பற்றப்படும் . 256 வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு அமைக்கப்படும்.
இடைத் தேர்தலைப் பொறுத்தவரை அனைத்து வாக்கு மையமும் பதட்டமானவைதான். தொகுதி முழுவதும் தேர்தல் நடைமுறை அமுலில் உள்ளது. தேர்தல் பணிகள் குறித்து மாநகர காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணைணைருடன் ஆலோசணைக்குப் பின் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும்.
திங்கள் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அலுவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். துணை ராணுவத்தினர் அடுத்த வாரம் வர உள்ளனர். கட்சி பிரமுகர்கள் மீது கடந்த முறை 33 எஃப்.ஐ.ஆர்.,கள் போடப்பட்டன... என்று கூறினார்.
இதனிடையே ஆர்.கே. நகர் தேர்தல் தொடர்பாக இன்று மாலை தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தில்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் ராஜேஷ் லக்கானியுடன் ஏ.கே.ஜோதி ஆலோசனை நடத்துகிறார். தேர்தலில் 10 கம்பெனி துணை ராணுவப் படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.