
இந்த உலகத்தின் மிக மோசமான வாழ்க்கை என்னவென்றால்...தன் உரிமை தன் சொந்த மண்ணிலேயே பறிக்கப்படுவதை உணர்ந்தும் அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் அடிமைப்பட்டு கிடப்பதுதான். இந்த வேதனையின் வீரியத்தை மிக துல்லியமாக உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் தமிழக அமைச்சர்கள். மாநில சுயாட்சி தத்துவத்தை முடக்குவது போல் தமிழகமெங்கும் ஆய்வு கூட்டம் நடத்துவேன் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவித்திருப்பதை எதிர்த்து அவர்களால் ஒரு எழுத்தை கூட பேசமுடியவில்லை. கேட்டால் ‘இது மாநில வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதுதானே’ என்று ஹிஹியென வழிகிறார்கள்.
தமிழக அமைச்சரவையின் இந்த சூழலை ‘திருடனுக்கு தேள் கொட்டியதை போல் சப்தம் போட வலியில்லாமல் கம்முன்னு இருக்குது எடப்பாடி - பன்னீர் அமைச்சரவை’ என்று படு மோசமாக வர்ணிக்கிறது தி.மு.க.
இந்நிலையில்தான் அ.தி.மு.க. அமைச்சர்கள் அதிர்ந்து உறையும் வண்ணம் அடுத்த ஆபரேஷனுக்கு திட்டமிட்டிருக்கிறார் தமிழக கவர்னர். ஆம் அது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மையப்படுத்திய மிக முக்கியமான விஷயம்.
’ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸர்’ என பெயரெடுத்திருக்கும் கவர்னர் புரோகித், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பொழுதுகளில் மிக கூர்மையான வேட்டையாடியாக நடந்து கொள்வாரென தெரிகிறது என்கிறார்கள் ராஜ்பவன் அதிகாரிகள். தமிழகத்தில் கடந்த பொது மற்றும் இடைத்தேர்தல்களில் ஓட்டுக்காக கோடிக்கோடியாய் பணம் விளையாடிய விளையாட்டை நன்கு அறிந்து வைத்திருக்கிறார் கவர்னர். கோயமுத்தூருக்கு தான் கிளம்பி செல்லும் முன் ராஜ்பவனின் ‘ஆவண’ பிரிவு ஊழியர்களுக்கு கவர்னர் இட்ட கட்டளை ‘கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் வாக்குக்கு பணம் கொடுத்தது தொடர்பாக பதிவான பத்திரிக்கை செய்திகள், காவல்நிலைய வழக்குகள் பற்றிய விபரங்களை எடுத்து அதை புள்ளி விபரங்களுடன் ஒரு பவர் பாயிண்ட் பிரசன்டேஷனாக தொகுத்து கொடுங்கள்.’ என்பதுதான்.
கோயமுத்தூர் விசிட்டை முடித்துவிட்டு சென்னை திரும்பியவர் இதை ஓடவிட்டு பார்த்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். அதன்படி கடந்த முறை பணப்பட்டுவாடாவால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது போல் இந்த முறை எந்த அவலமும் நிகழ கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறாராம். ஆளுங்கட்சியோ, எதிர்கட்சியோ, ஆளும் கனவிலிருக்கும் கட்சியோ யாராக இருந்தாலும் சரி முறைகேடான விஷயங்களுக்கு பணத்தை வெளியிலெடுத்தால் அவர்களை உள்ளே தூக்கி போடுமளவுக்கு கிடுக்கிப்பிடியாய் அதிகாரிகளையும், போலீஸையும் நடந்து கொள்ள உத்தரவிடும் முடிவில் இருக்கிறாராம்.
இதற்காக தமிழகமெங்கும் இருந்து மிக மிக நேர்மையான, கட்சி சாராத, துணிவான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பொறுக்கி எடுத்து பணியிலிருக்கும் முடிவையும் வைத்திருக்கிறாராம். ஆனால் இதற்கெல்லாம் டெல்லி தலைமை அவருக்கு டபுள் ஓ.கே. சொல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம். அவர்கள் பச்சைக்கொடி காட்டிவிட்டால் புல்லட் டிரெயின் போல் கவர்னர் பாய்வார் என்கிறார்கள். ஒருவேளை டெல்லி, புரோகித்தை ‘அவசரம் காட்டாதீங்க’ என்று மழுப்பலாக கூறினால் ‘பின்னே, என்னை எதுக்கு இங்கே உட்கார வெச்சீங்க? நேர்மையான அதிகாரியா இருந்தாலும், நடக்குற தப்பை கண்டுக்காமல் இருந்தால் அவரும் குற்றவாளிதான். அவரோட கைகளை கட்டினவங்க அதைவிட மோசமான குற்றவாளிகள்.’ அப்படின்னு தட்டிக் கேட்கவும் தயங்க மாட்டார்கள் என்கிறார்கள்.
கவர்னரின் இந்த திட்டம் ஆளும் தரப்பின் கவனத்துக்கு ராஜ்பவனை சேர்ந்த ”மிக மிக நேர்மையான” பணியாளர்கள் மூலம் சென்றடைந்திருக்கிறதாம்.
பன்வாரிலாலுக்கு டெல்லி பச்சை கொடி காட்டுமா? மஞ்சள் கொடி காட்டி பெண்டிங்கில் போட வைக்குமா அல்லது சிவப்பு கொடி காட்டி முடக்குமா?...என்பதை பொறுத்திருந்து கவனிப்போம்.