
மக்களின் பணத்தை எடுத்து தனது நண்பர்களாக இருக்கும் தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் சட்டமன்றத் தேர்தல், வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதற்காக குஜராத்தில் பாஜகவும் காங்கிரஸும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
பாஜக அரசின் குறைகளை விளக்கி காங்கிரஸும், தங்கள் கட்சியின் சிறப்பான செயல்பாடுகளை விளக்கி பாஜகவும் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
போர்பந்தரில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பின்னர், மீனவர்களுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என உறுதியளித்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது, மீனவர்களுக்கு 25% மானியத்தில் டீசல் வழங்கப்பட்டது. ஆனால், மீனவர்களுக்கான அந்த திட்டத்தை பாஜக ஆட்சி அமைந்தவுடன் ரத்து செய்துவிட்டது என குற்றம்சாட்டினார்.
தற்போது சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக, மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிப்பதாக தகவல் வந்துள்ளது. இதற்கு பிரதமர் மோடியின் நண்பர்களாக உள்ள 15 தொழிலதிபர்களே காரணம். மீனவர்களுக்காக ஆக்கப்பூர்வமாக செயல்படாத பிரதமர் மோடி, தொழிலதிபர்களாக இருக்கும் அவரது நண்பர்களுக்கு துறைமுகத்தை பரிசாக அளித்துவிட்டார். மக்களின் பணத்தை எடுத்து தனது நண்பர்களாக இருக்கும் தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிவருகிறார்.
தற்போது பணக்காரர்களுக்காக மட்டுமே கதவு திறந்துள்ளது. இந்த தேர்தலில், காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். அப்போது முதல்வர் அலுவலகமும், சட்டசபையும் உங்களுக்காக திறந்திருக்கும். அப்போது வந்து உங்களது குறைகளை கூறுங்கள். உங்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என ராகுல் காந்தி பேசினார்.