
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷால், தயாரிப்பாளர்கள் நலன் கருதி அச்சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என சேரன் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக சென்னையில் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சேரன், தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது அரசாங்கத்தை சார்ந்தே இயங்க வேண்டியிருக்கிறது. தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் பதவியேற்று 8 மாதங்கள் ஆகின்றன. ஆனால் அவர் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இந்நிலையில், தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சிறுபிள்ளைத்தனமாக போட்டியிடுகிறார்.
அரசாங்கத்தை சார்ந்து இயங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக இருந்துகொண்டு அரசாங்கத்திற்கு எதிராக பேசுவதும் அமைச்சர்களுக்கு எதிராக மீடியாக்களில் பேசுவதுமாக விஷால் இருக்கிறார். இவை அனைத்துமே தயாரிப்பாளர்களை பாதிக்கும். தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது அதில் உறுப்பினர்களாக இருக்கும் 1230 பேரின் வாழ்க்கை அல்ல. அதை சார்ந்து இருக்கக்கூடிய 23 சங்கங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் முதல் போஸ்டர் ஒட்டுபவர் வரை என சுமார் 10 லட்சம் பேரின் வாழ்க்கை. இவை எதையுமே கருத்தில் கொள்ளாமல் தேர்தலில் நிற்கிறார் விஷால்.
ஆர்.கே.நகரில் தேர்தலில் போட்டியிடுவதென்றால், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால், வேட்புமனுத் தாக்கலை திரும்பப்பெற வேண்டும். அப்படி இல்லையெனில் விஷால் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
140 சிறிய பட்ஜெட் படங்களுக்கு தமிழக அரசு மானியம் வழங்கியுள்ளது. கேளிக்கை வரியை குறைத்துள்ளது. இப்படி சினிமா துறைக்கு ஆதரவாக செயல்படும் அரசுக்கு எதிராக விஷால் செயல்படுவது மற்ற தயாரிப்பாளர்களின் நலனை பாதிக்கும்.
அறிவிப்புக்காகவும் மீடியா விளம்பரத்துக்காகவும் பணத்துக்காகவும் விஷால் வாழ்கிறார். தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் விஷால், அவரது விளம்பரத்துக்காக தேர்தலில் நிற்பதற்கு தயாரிப்பாளர்கள் பழியாக முடியாது.
விஷாலின் இந்த செயல் தயாரிப்பாளர்களின் நலனுக்கு எதிராக உள்ளது. எனவே தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சூழல் உருவாகிவிடும் என கடும் காட்டமாக பேசினார் சேரன்.