சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கீடு... நடிகை குஷ்பு கனவு அம்பேல்..!

By Asianet TamilFirst Published Mar 10, 2021, 10:21 PM IST
Highlights

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், குஷ்புவைச் சுற்றி வெளியான  தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தத் தொகுதியின் பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட குஷ்பு, அந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது. குஷ்பும் அந்தத் தொகுதியில் பனிமனை அமைத்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுத்தும் உசுப்பேற்றினார் குஷ்பு. சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று குஷ்புவிடம் கேள்வி எழுப்பியபோதெல்லாம், கட்சி வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன் என்றே குஷ்பு தெரிவித்தார்.
மேலும் சென்னையில் பாஜக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், துறைமுகம், தி.நகர் உள்ளிட்ட தொகுதிகளைக் கேட்பதாகவும் தகவல் வெளியானது. எனவே, சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்றும் அந்தத் தொகுதியில் குஷ்பு போட்டியிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. அதில், ஆயிரம் விளக்கு, துறைமுகம் ஆகிய தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.
மாறாக, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பாஜக இல்லை என்றாகிவிட்டது. அதேபோல இந்தத் தொகுதியில் குஷ்பு போட்டியிட முடியாது என்பதும் உறுதியாகியுள்ளது. இதேபோல ராஜபாளையம் தொகுதியில் நடிகை கெளதமி போட்டியிடுவார் என்று பரவலாகப் பேசப்பட்டது. கெளதமியும் ராஜபாளையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். தற்போது ராஜபாளையம் தொகுதியில் அதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!