சென்னை – சேலம் இடையே தற்போது தொடங்கப்பட்டுள்ள 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தைப் போல மேலும் 8 திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த மத்திய – மாநில அரசுகள் ரெடியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை – சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாயில் 277 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதனால் விளை நிலங்கள், வனங்கள், வீடுகள், கிராமங்கள் போன்றவை கடுமையாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை , காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 8 வழிச்சாலை அமைப்பதற்கான அளவீட்டுப் பணிகளின் போது விவசாயிகளும் , பொது மக்களும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மேலும் அளவீட்டுப்பணிகளை பல இடங்களில் விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். சில இடங்களில் அளவீட்டுக் கற்களை பிடுங்கி எறிந்தனர். எதிர்க்கட்சியினர், பொது மக்கள், விவசாய அமைப்பினர் உள்ளிட்டோர் கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை – சேலம் பசுமை வழிச்சாலையைப் போல தமிழ்நாட்டில் மேலும் 8 திட்டங்கள் வர இருப்பதாக நெடுஞ்சாலை துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே மதுரை – தஞ்சாவூர் இடையே பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்திருந்தார். தற்போது மேலும் 8 திட்டங்களை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்திருப்பது தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.