அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு பெருகியதால், தன்னுடைய ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம், கடந்த 23 அன்று நடைபெற்ற பொதுக்குழுவுக்கு தடை கோர ஓபிஎஸ் தரப்பு முயன்றது. அதன்படி ஓபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர் திருப்பூர் எம். சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தா. அந்த மனுவில், “அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களின் பதவிக்காலம் இன்னும் 5 ஆண்டுகளுக்கு உள்ளன. இந்த சூழலில் ஒற்றைத் தலைமை தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்களுக்காகவோ அதிமுக பொதுக்குழுவில் எந்த தீர்மானமும் கொண்டு வரக்கூடாது” என வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையும் படிங்க: AIADMK: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 4 பேர் அதிமுகவில் நீக்கம்..இபிஎஸ் தரப்புக்கு திகில் காட்டிய ஓபிஎஸ் தரப்பு
அந்த வழக்கை தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீடு வழக்கு கடந்த ஜூன் 22 நள்ளிரவில் உயர் நீதிமன்றம் விசாரித்தது. ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், “அதிமுக பொதுக்குழுவில் ஏற்கெனவே நிறைவேற்ற திட்டமிடப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர்த்து புதிய தீர்மானங்கள் குறித்தோ அல்லது கட்சி விதிகளில் திருத்தம் செய்வது குறித்தோ எந்த முடிவும் எடுக்கக் கூடாது” என உத்தரவிட்டது. இதையடுத்து ஜூன் 23 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. மாறாக 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக இபிஎஸ் தரப்பு அறிவித்தது. இது சட்ட விரோதம் என ஓபிஎஸ் தரப்பு வெளி நடப்பு செய்தது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு சுத்துபோடும் ஓபிஎஸ்.. திரும்பிய பக்கமெல்லாம் செக்?
இந்த வழக்கில் இபிஎஸ் தரப்பு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எம். சண்முகம் தொடர்ந்துள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “அதிமுக பொதுக்குழுவில் தலையீடு செய்து நீதிமன்றம் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க அதிகாரம் இல்லை. அதிமுக அவைத் தலைவர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒட்டுமொத்த கருத்தை பொறுத்தே தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்படும். கட்சி விதிகளின்படி பொதுக்குழுவுக்கே அனைத்து அதி்காரங்களும் உள்ளன.
அதன்படி, விதிகளை திருத்தம் செய்யவும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கவும் பொதுக்குழுவுக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே, அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூன் 22-ம் தேதி பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதம் என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.” என்று இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்னும் சில தினங்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:ஓபிஎஸ்-இபிஎஸ்ஸுக்கு கொம்பு சீவி விட்டாச்சு.. இரட்டை இலையை முடக்குவதே பாஜக லட்சியம்.. பொங்கும் நாஞ்சில் சம்பத்!