முருகன் கோயில் இல்லாத பகுதிகளில் வேல் யாத்திரை ஏன்..? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி..!

By Asianet TamilFirst Published Nov 7, 2020, 9:53 PM IST
Highlights

முருகன் கோயிலுக்கு செல்வதாக இருந்தால் முருகன் கோயில் இல்லாத பகுதிகளுக்கு யாத்திரை ஏன் செல்ல வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
 

தமிழக பாஜகவின் வேல் யாத்திரையை தடை செய்யக் கூடாது என அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் அவசர வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “வேல் யாத்திரையை தடுக்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும்.வேல் யாத்திரை சுமூகமாக செல்ல ஏதுவாக அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பாஜக சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி வாதிடுகையில், “இது அரசியல் யாத்திரை அல்ல” எனத் தெரிவித்தார். தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “யாத்திரைக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தில் எந்த விவரமும் இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயமும் உள்ளது” எனத் தெரிவித்தார். மேலும் அவர் வாதிடுகையில், “கொரோனா இரண்டாவது அலை பரவ வாய்ப்புள்ள நிலையில், நேற்று யாத்திரையில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணியவில்லை” எனத் தெரிவித்தார்.


அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “யாத்திரையில் எத்தனை பேர் பாஜக தலைவருடன் செல்ல உள்ளனர்? அதில் 60 வயதுக்கு மேற்பட்டோர் எத்தனை பேர்? முருகன் கோயிலுக்கு செல்வதாக இருந்தால் முருகன் கோயில் இல்லாத பகுதிகளுக்கு யாத்திரை ஏன் செல்ல வேண்டும்” என கேள்வி எழுப்பினர். டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தில் யாத்திரை நிறைவு செய்வதாக கூறப்பட்டுள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இந்தக் கேள்விகளுக்கு விரிவான பதிலை தாக்கல் செய்வதாக பதிலளித்த பாஜக தரப்பு, யாத்திரையை டிசம்பர் 5ம் தேதி முடித்து கொள்ளவும் தயார்” எனத் தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

click me!