எடப்பாடி பழனிச்சாமி ஒரு நிமிடம் கூட பதவியில் இருக்க தகுதியில்லை... மு.க. ஸ்டாலின் ஆவேசம்..!

By Asianet TamilFirst Published Nov 7, 2020, 9:24 PM IST
Highlights

தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்துவிட்டு, தமிழ்நாட்டை ஆள நினைப்பதைப் போன்ற துரோகச் சிந்தனை வேறு எதுவும் இருக்க முடியாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
 

வேலூரில் திமுக சார்பில் நடைபெற்ற ‘தமிழகம் மீட்போம் - 2021’ தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் வருகிற சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் நாம் முழுமையான வெற்றியை பெற்றாக வேண்டும். தமிழகத்தில் நடைபெற்றுவரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஒரு நிமிடம் கூட நீடிக்கத் தகுதி இல்லை. பழனிசாமி முதல்வராக இருக்க வேண்டும், அவருக்கு அந்தத் தகுதி இருக்கிறது என்று நினைத்து மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை.


ஜெயலலிதா மரணம் அடைந்ததாலும் சசிகலா சிறைக்குப் போனதாலும் ஓ.பன்னீர்செல்வம் தனியாகப் போனதாலும் முதல்வர் ஆனவர்தான் எடப்பாடி பழனிசாமி. ஏறி வந்த ஏணியை எட்டி மிதித்துத் தள்ளுவதைப் போல சசிகலாவையே தூக்கி எறிந்த பழனிசாமிக்கு, தமிழ்நாட்டு மக்கள் மீது பற்றோ பாசமோ இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? காபி 'கப்'பைத் தூக்கிப் போடுவதைப் போல மக்களைத் தூக்கி எறியக் கூடியவர்தான் எடப்பாடி பழனிசாமி. அதனை அவரது ஒவ்வொரு நடவடிக்கை மூலமாகவும் உணரலாம்!
தமிழ்நாட்டில் எந்தத் தரப்பு மக்களாவது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? தமிழ்நாட்டின் எந்த உரிமைக்காவது பழனிசாமி குரல் கொடுத்துள்ளாரா? தமிழ்நாட்டுக்கு எந்தச் சலுகையாவது வாங்கித் தந்தாரா? தமிழகத்துக்கு எந்தப் புதிய திட்டமாவது கொண்டு வந்தாரா? எதுவும் இல்லை. தமிழக ஆட்சி அதிகாரத்தை வைத்து தானும் செய்யவில்லை. மத்தியில் உள்ள ஆட்சியின் துணையை வைத்து அவர்களையும் செய்ய வைக்கவில்லை. மத்திய அரசாங்கம் தமிழகத்துக்குச் செய்த துரோகத்தை என்னால் வரிசையாகப் பட்டியலிட முடியும். இவை அனைத்தையும் கை கட்டி வேடிக்கை பார்க்கும் ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி. அதனால்தான் இந்த ஆட்சி ஒரு நிமிடம் கூட கோட்டையில் இருக்கக் கூடாத ஆட்சி என்று சொன்னேன்.


தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்துவிட்டு, தமிழ்நாட்டை ஆள நினைப்பதைப் போன்ற துரோகச் சிந்தனை வேறு எதுவும் இருக்க முடியாது. தமிழர்கள் தங்கள் எதிரியைக் கூட மன்னிப்பார்கள். ஆனால், துரோகிகளை மன்னிக்க மாட்டார்கள். அத்தகைய துரோகக் கூட்டத்தின் கையில் கோட்டை சிக்கி இருக்கிறது. பாஜக அரசு எதைச் செய்தாலும் ஆதரிக்க வேண்டும் என்பது மட்டும்தான் அதிமுகவின் கொள்கையா?
எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தை முழுக்க அடமானம் வைத்துவிட்டார். அப்படி அடமானம் வைக்கப்பட்ட தமிழகம் மீட்கப்பட வேண்டும்! தலைவர் கருணாநிதி, தமிழகத்தின் ஒவ்வொரு தரப்பினருக்கும் பார்த்துப் பார்த்து சலுகைகளைச் செய்தார். ஆனால், அதிமுக அரசு, ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் இதுபோல் அடுக்கடுக்கான துரோகத்தைச் செய்து வருகிறது. துரோகக் கூட்டத்தை வீழ்த்த தமிழ்நாட்டு மக்கள் துடிக்கிறார்கள். மீண்டும் கல்வி இல்லாத, வேலை இல்லாத சமூகமாக தமிழினத்தை மாற்றும் சதியை ஒரு கூட்டம் தொடங்கி இருக்கிறது. அந்தச் சதிக்கு தமிழ்நாட்டு அரசு, இந்த அதிமுக ஆட்சி தலையாட்டிக் கொண்டு இருக்கிறது. இது தேர்தல் என்ற ஜனநாயகப் போரால் தடுக்கப்பட வேண்டும். அதற்காகவே சட்டப்பேரவைத் தேர்தல் வருகிறது.
வேலூர் கோட்டையில் துப்பாக்கியாலும் வாள்களாலும் புரட்சி நடந்தது. அது ஒரு காலம். இன்று மக்கள் நடத்த வேண்டியது ஜனநாயகப் புரட்சி. 'நமது பாதை வேட்டு முறையல்ல, ஓட்டு முறை' என்றார் அண்ணா. ஓட்டு முறையால், அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். தமிழகம் இழந்த பெருமையை மீட்போம்!” என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
 

click me!