+2 பொதுத்தேர்வு ரத்து... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 16, 2021, 1:20 PM IST
Highlights

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து உத்தரவுக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையினால் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாமல் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தான் 12ம் வகுப்பு பயின்று வந்தனர். எனவே அவர்கள் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் முழுமையாக பாடத்திட்டங்களை பயின்றியிருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். 

மேலும் 2020 - 2021ம் கல்வியாண்டில் 90 சதவீத அரசு பள்ளிகளிலும், 80 சதவீத அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும், 50 சதவீத ஆங்கில வழி தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளோ, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை என்றும், சிபிஎஸ்சி பள்ளிகளில் மட்டுமே முறையாக ஆன்லைன் வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப்பட்டதாகவும்  குற்றச்சாட்டினார். எனவே சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிக்கப்பட்டதை போல, மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது சட்ட விரோதமானது என குறிப்பிட்டுள்ளார். 

எனவே தமிழக அரசின் +2 பொதுத்தேர்வு ரத்து செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், ஒரிரு மாதங்கள் கழித்து தேர்வை நடத்தலாம் என்றும் யோசனை கூறியுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசின் அனைத்து முடிவுகளிலும் தலையிட முடியாது என்றும், அரசின் விளக்கத்தை கேட்ட பிறகே இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜூன் 23ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 

click me!