
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில், அந்த இல்லத்திற்கு தற்போது மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் பல முக்கிய அரசியல் ரீதியான முடிவுகளை எடுக்கும் களமாக இருந்தது. கட்சி மற்றும் ஆட்சி என இரண்டிலும் முக்கிய முடிவுகளை ஜெயலலிதா வேதா இல்லத்திலிருந்துதான் பல சமயங்களில் எடுத்தார். அதிமுக கட்சியின் அதிகார மையமாக அந்த இல்லம் விளங்கியது
இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் நினைவில்லமாக மாற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை அதிமுக தொண்டர்களும், பொது மக்களும் வரவேற்றனர். ஆனால், டி.டி.வி. தினகரன் தரப்பினர் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் தீபக் ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர்.
வேதா இல்லம் எங்கள் பூர்வீக சொத்து. இதனை வாங்கவோ, விற்கவோ யாருக்கும் உரிமை இல்லை. இந்த இல்லத்திற்கு உரிமையானவர்களான எங்களுக்கு ஒரு நோட்டீஸ் கூட அனுப்பாமல் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதை எதிர்த்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பேன்.”, என தீபா கூறியிருந்தார்.
அதேபோல், ”வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என சுயநலத்திற்காக அவசர கதியில் அறிவிக்கப்பட்டுள்ளது”, என டி.டி.வி. தினகரன் கூறியிருந்தார்.
இதையடுத்து கடந்த ஆகஸ் மாதமே வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் பணிகளை தமிழக அரசு துவங்கியது. அதன் முதல் கட்டமாக வேதா இல்லத்தை அளவெடுக்கும் பணிகளில் வருவாய் துறையினர் ஈடுபட்டனர்.
இநநிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன், வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போய்ஸ் தோட்ட இல்லத்தில் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையொட்டி போய்ஸ் தோட்ட பகுதி முழவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து அளவீட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.