கொரோனாவை கட்டுப்படுத்த புதிய டெக்னிக்..!! சென்னை மாநகராட்சி அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 14, 2020, 11:40 AM IST
Highlights

உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோய் பாதித்த நபர்கள் ஆகியோரை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்குதல், கொரோனா நோய் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளை தன்னார்வலர்கள் உடன் இணைந்து செயல்பட வேண்டும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் கே.பிரகாஷ் அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டார்,இக்கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது, கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பின் ஒருபகுதியாக 15 மண்டலங்களிலும், உள்ள 200 கோட்டங்களிலும் 200 உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்களை குழு தலைவர்களாக நியமித்து மைக்ரோ திட்டம்  செயல்படுத்தப்பட உள்ளது. இந்த குழுக்களின் தலைவராக உதவி பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளார் இக்குழுவில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். 

குழுவின் பணியானது நோய்த்தொற்று பாதித்த நபர்களை மருத்துவமனைக்கு அனுப்ப உதவி செய்தல், மற்றும் அவர்களது தொடர்புகளை கண்டறிந்து கண்காணித்து நோய்களின் தீவிரம் கருதி உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும், மேலும் 11,500 பணியாளர்கள் தினந்தோறும் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி இருக்கிறதா என்று ஆய்வு செய்வார்கள், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்தல், பொது மக்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்குதல், கபசுர குடிநீர் வழங்குதல் மறுபயன்பாட்டுடன் கூடிய துணியாலான முகக்கவசம் வழங்குதல், வீடு வீடாக சென்று நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிதல், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோய் பாதித்த நபர்கள் ஆகியோரை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்குதல், கொரோனா நோய் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளை தன்னார்வலர்கள் உடன் இணைந்து செயல்பட வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் மக்கள் பயன்படுத்தும் பொதுக் கழிப்பறைகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன, மேலும் குழாய்கள் மூலம் குடிநீர் பெறும் வசதி இல்லாத குடிசைப் பகுதிகளில் வாழும் மக்கள் லாரியில் வரும் தண்ணீர் பிடிப்பதற்காக பெருமளவில் கூடுகிறார்கள், இதன் மூலம் நோய் பரவும் அபாயத்தை தவிர்க்க சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்துடன் இணைந்து சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் அமைத்து வருகின்றனர். இதன் மூலம் மக்கள் சமூக விலகலை கடைப்பிடித்து தண்ணீர் பிடிக்க முடியும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

 

click me!