வட மாவட்டங்களில் ஆட்டத்தை தொடங்கிய சசிகலா…. ஓட்டம்பிடிக்க தயாராகும் நிர்வாகிகள்… கலக்கத்தில் அதிமுக தலைமை..!

By manimegalai aFirst Published Nov 18, 2021, 7:14 PM IST
Highlights

பசும்பொன் தேவர் குரு பூஜையின் போது தென் மாவட்டங்களில் சசிகலா மேற்கொண்ட சுற்றுப்பயணம் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாதது அவரது ஆதரவாளர்களை கவலை அடையச் செய்தது.

பசும்பொன் தேவர் குரு பூஜையின் போது தென் மாவட்டங்களில் சசிகலா மேற்கொண்ட சுற்றுப்பயணம் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாதது அவரது ஆதரவாளர்களை கவலை அடையச் செய்தது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கு செல்லும் முன், அதிமுக அரசை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைத்து சென்ற சசிகலாவுக்கு அடுத்த நான்கு ஆண்டுகளும் உச்சக்கட்ட சோதனையாகவே அமைந்தது. சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து ஒட்டு மொத்தமாக துடைத்தெறிந்த எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர் செல்வத்தையும் ஓரம்கட்டி கட்சியில் முதன்மையானவராய் வளர்ந்து வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி கோஷ்டியினை நம்பி மோசமடைந்ததாக எண்ணிய பன்னீர் செல்வமும், சசிகலா பக்கம் எந்த நொடியிலும் செல்வார் என்றே தொடர்ச்சியாக கூறப்படுகிறது. அவரது நடவடிக்கைகளும் அப்படியாகவே தொடர்கிறது. சிறையில் இருந்து விடுதலையாகியதும் தமிழ்நாடு அரசியல் களத்தில் பேரதிர்வுகளை சசிகலா ஏற்படுத்துவார் என்று கூறப்பட்டது. ஆனால் ஒரு நாள் பிரம்மாண்ட வரவேற்போடு வீட்டிற்குள் முடங்கினார் சசிகலா. கொரோனா பரவலால் அவர் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்று கூறப்பட்டது. தம்மை சேர்த்துக்கொள்வார்கள் என்று காத்திருந்த சசிகலாவிற்கு எடப்பாடி ஏமாற்றத்தை மட்டுமே பரிசாக அளித்தார். சட்டமன்ற தேர்தல் நெருங்கியதும், அதிமுக-வையும் ஆட்சி செய்ய முடியாமல், அமமுக-வுக்கும் ஆதரவு தெரிவிக்க முடியாமல் திணறிய சசிகலா, அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்தார்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கணிசமான தொகுதிகளை பெற, அமமுக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதையடுத்து அமமுக-வை நம்புவது வீண் என்று எண்ணிய சசிகலா, அதிமுக-வை கைப்பற்றுவதையை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார். அதிமுக தலைமை பொறுப்புகளில் இருப்பவர்கள் எவ்வளவோ தரக்குறைவாக விமர்சித்தும் சசிகலா பொறுமையாக இருந்து வருகிறார். திடீரென தொண்டர்களுக்கு தொலைபேசியில் பேசி தினமும் பத்து ஆடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார் சசிகலா. ஆனால் அடுத்த சில நாட்களில் அந்த அத்தியாயமும் முடிவுக்கு வந்தது. ஊரடங்கு விதிகளும் தளர்த்தப்பட்டதால் சசிகலா எப்போது களத்திற்கு வருவார் என்று தொண்டர்கள் காத்திருந்தனர்.

இந்தநிலையில் அதிமுக 50வது பொன்விழா ஆண்டையொட்டி நான்கரை ஆண்டுகளுக்கு பின்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அடுத்த நாளே ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு சென்று அதிமுக கொடியை ஏற்றிய சசிகலா, அங்கு கழக பொதுச் செயலாளர் சசிகலா என்று வைக்கப்பட்டிருந்த கல்வெட்டையும் திறந்து வைத்தார். அப்போது சசிகலாவிற்கு புதிதாக புரட்சி தாய் என்ற பட்டத்தை அவரது ஆதரவாளர்கள் வழங்கினர். சசிகலா நடவடிக்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மியக்வும் தரக்குறைவாகவும் விமர்சித்தனர்.

இதையடுத்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை விழாவையொட்டி தென் மாவட்டங்களுக்கு சசிகலா சுற்றுப்பயணம் செய்தார். அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று ஓ.பி.எச். கொளுத்தி போட மீண்டும் அதிமுக-வில் கலகம் வெடித்தது. பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு ஜெயக்குமார் மட்டுமல்லாது அவரது ஆதரவாளராக இருந்த கே.பி.முனுசாமியும் கடுமையாக எதிர்விணையாற்றினார். இந்த பரபரப்பு அடங்கியிருந்த நிலையில் மீண்டும் கட்சிக்குள் புகைச்சலை கிளப்பி வருகிறார் சசிகலா. கழக பொதுச் செயலாளர் என்ற பெயரில் மக்கள் பிரச்சினைகளுக்கு அறிக்கைகளை வெளியிட்டு வரும் சசிகலா, சமீபத்தில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

இந்தநிலையில், வட மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் பணிகளை சசிகலா தொடங்கியிருக்கிறார். அந்தவகையில் முதல் கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்துள்ளனர். சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சசிகலா தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தலைமை கழக பேச்சாளர் பாலன், எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணி, மாவட்ட பிரதிநிதி பூபாலன், இளைஞரணி துணைத் தலைவர் பொன்னுசாமி, திருப்போரூர் ஒன்றியத்தை சேர்ந்த கழக நிர்வாகிகள் பலரும், மகளிர் அணி நிர்வாகிகளும் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றதாக அவர் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சசிகலாவை சந்தித்த நிர்வாகிகள் அதிமுகவை ஒருங்கிணைக்க கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தம்மை சந்தித்தவர்களுடன் சசிகலா குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். தென் மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்து வட மாவட்டங்களில் சசிகலா ஆட்டத்தை தொடங்கியிருப்பதால் அதிமுக தலைமை கலக்கம் அடைந்துள்ளது.

click me!