ஓபிஎஸ் இனியும் அமைதியா இருக்காதீங்க.. உடனே சசிகலாவை பொதுச்செயலாளராக்குங்க.. அதிமுக முன்னாள் நிர்வாகி அதிரடி.!

By vinoth kumarFirst Published Nov 18, 2021, 6:56 PM IST
Highlights

 தான் இன்னும் எடப்பாடி பழனிசாமியால் எங்கும் தன்னை பொதுச்செயலாளர் என சொல்லிக்கொள்ள முடியவில்லை. அவருக்கு அந்த பதவி மேல் ஒரு ஆசை இருப்பது தெரிந்தது தான். ஆனால் தொண்டர்கள் விருப்பம் தான் முக்கியம்.

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என தேனி கர்ணன் அதிரடியாக கூறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றுவிட்டு வெளியே வந்த சசிகலா காரில் அதிமுக கொடியுடன் வந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இதனால், சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். இதனையடுத்து, கட்சியில் ஒதுங்குவதாக கூறிய சசிகலா அதிமுக தொண்டர்களிடம் தொலைபேசி பேச ஆரம்பித்தார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு சசிகலாவுடன் பேசும் நிர்வாகிகள் அமமுக நிர்வாகிகளே என்று கூறிவந்தனர். 

அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கும் எண்ணமே இல்லை என ஓபிஎஸ், இபிஎஸ் திட்டவட்டமாக கூறிவந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி சசிகலாவை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார். 

இந்நிலையில், சசிகலாவை எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்து அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஓர் அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் கண்ணியத்தோடு பேச வேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது அண்ணா கற்று கொடுத்த கொள்கை. அதுதான் அதிமுகவின் பூர்வாங்கக் கொள்கை என்று எடப்பாடியை பெயர் குறிப்பிடாமல் நேரடியாகவே விமர்சித்தார். மேலும், அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் ஏற்றுக்கொள்வது ஏற்றுக் கொள்ளாத மக்கள் விருப்பம். அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்வது பற்றி தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என கூறியது அதிமுகவில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், சசிகலாவின் தீவிர ஆதரவாளராக அறியப்படும் தேனி கர்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-  அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தொண்டர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். அதனால் தான் இன்னும் எடப்பாடி பழனிசாமியால் எங்கும் தன்னை பொதுச்செயலாளர் என சொல்லிக்கொள்ள முடியவில்லை. அவருக்கு அந்த பதவி மேல் ஒரு ஆசை இருப்பது தெரிந்தது தான். ஆனால் தொண்டர்கள் விருப்பம் தான் முக்கியம்.

ஓபிஎஸ் இனியும் அமைதி காக்கக்கூடாது. உடனே கட்சியினரை ஒன்று திரட்டி சசிகலாவை பொதுச்செயலாளராக பணிகளை தொடர அழைக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை நம்பி கெட்டவர்கள் பலர் உள்ளார்கள். அது ஓபிஎஸ் அவர்களுக்கு நன்கு தெரியும். கட்சியை வழிநடத்தும் அனைத்து தகுதிகளையும் கொண்டவர் சசிகலா மட்டுமே. ஓபிஎஸ் அரசியலில் எல்லாம் தெரிந்தவர். விரைவில் அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன் என தேனி கர்ணன் கூறியுள்ளார்.

click me!