வன்னியர்களுக்காக வரிந்துகட்டி இறங்கும் ஸ்டாலின்.. இட ஒதுக்கீட்டு வழக்கில் மேலும் 3 மேல்முறையீட்டு மனுக்கள்.!

By manimegalai aFirst Published Nov 18, 2021, 6:31 PM IST
Highlights

இட ஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் பா.ம.க. சார்பில் ஏற்கெனவே 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இட ஒதுக்கீட்டு சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மற்றும் பா.ம.க. சார்பில் ஏற்கெனவே 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

வன்னியர்களின் நீண்ட கால கோரிக்கையான உள் இடஒதுக்கீடு கோரிக்கை கடந்த ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் வெற்றிக் கனியை பறித்தது. கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டு மசோதாவை சட்டமன்றத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தா.ர் இந்த தீர்மானம் வெற்றி பெற்றதும், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமாக வழங்கப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்த பின்னர் இந்த அளவு மாற்றி அமைக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதனால் பா.ம.க-வினர் மற்றும் வன்னியர் சமுதாய மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதன் பலனை தேர்தலில் அறுவடை செய்யலாம் என அதிமுக கூட்டணி நம்பியது.

ஆனால், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் கைவைத்த அதிமுக-விற்கு தென் மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. முக்குலத்தோர் அமைப்புகளின் கடும் எதிர்ப்பால் ஓ.பி.எஸ்., உள்ளிட்ட தென் மாவட்ட அமைச்சர்கள் இது தற்காலிகமானது என்று மழுப்பலாக கூறினர். அப்போது இச்சட்டம் குறித்து பெரிதாக ரியாக்ட் செய்யாத திமுக, நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் கூடுதலாகவே வழங்கியிருப்போம் என்று கூறி பரப்புரை செய்தனர். இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தென் மாவட்டங்களில் போராட்டம் வெடித்தது. சசிகலாவும் இல்லாத நிலையில் தென் மாவட்டங்களில் அதிமுக-வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்கிய பின்னரும் கூட வட மாவட்டங்களிலும் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதனிடையே வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து 25-க்கும் அதிகமான வழக்குகள் தொடரப்பட்டன. இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றது. ஆட்சி மாறியாதால் உள் ஒதுக்கீடு சட்டம் தொடருமா என்று கேள்விகள் எழுந்த நிலையில் ராமதாசும் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார். ஜூலை 26-ம் தேதி அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில், வன்னியர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு பரபரப்பு தீர்ப்பை அளித்தது.

சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதனை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?'' எண்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், 'சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டினை வழங்க முடியுமா? இதுதொடர்பாக முறையான தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா என்பன உள்பட ஏழு கேள்விகளை எழுப்பினோம். அதற்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே, வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பளித்து சட்டத்தை ரத்து செய்தனர்.

இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இட ஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு தவறானது. இந்த உத்தரவால் தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு அதில் தெரிவித்திருந்தது. இதையடுத்து, பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக இரண்டு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி , தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்,  தமிழக சட்டத்துறை,தமிழ்நாடு உயர்கல்வித் துறை ஆகியவற்றின் சார்பில் வழக்குரைஞர் டி. குமணன் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக 3 மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.

click me!