ரஜினி, கமலுக்கு என்ன அச்சம்..?? அஜித், விஜய் துணிந்து குரல் கொடுங்க.. தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Nov 18, 2021, 6:21 PM IST
Highlights

நீங்கள் என்ன தியேட்டர் உரிமையாளர்களா? நம்மை யாரென்ன செய்துவிட முடியும், யாரும் தங்களை தட்டிக் கேட்க முடியாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது.  

சூர்யாவை மிரட்டும் பாமகவின் அராஜகத்தை எதிர்த்து நடிகர் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோர் துணிந்து குரல் கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் இதுபோன்ற மிரட்டல் அரசியல் கட்சிகளுக்கு பயம்  வரும் என்று திரைப்பட தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார் ஆவேசம் தெரிவித்துள்ளார்.

திரைப்படத்தில் குறிப்பிட்ட காட்சியை நீக்கிய பின்னரும் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவினர் சூர்யாவை மிரட்டிவருவது சரியல்ல என அவர் கூறியுள்ளார். ஜெய் பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தி விட்டதாகவும் அதற்க்காக சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சூர்யாவை எட்டி உதைப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு கொடுக்க தயார் என பாமக மாவட்ட செயலாளர் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்பதுடன் 5 கோடி ரூபாய் மாநநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் பாமக தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வடமாவட்டங்களில் சூர்யாவின் பேனர்களை செருப்பால் அடிப்பது, அவரது உருவபொம்மையை எரிப்பது போன்ற நடவடிக்கைகளில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகம்,  திராவிடர் விடுதலைக் கழகம் போன்ற அமைப்புகள் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர் கருணாஸ், இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் ப.ரஞ்சித், நடிகர் டி. ராஜேந்தர் ஆகியோர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனாலும் சூர்யா- பாமக மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் பி.டி செல்வகுமார், பாமகவை எச்சரித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில், 

ஜெய் பீம் திரைப்படம் சமூக அக்கறையில் எடுக்கப்பட்டுள்ள ஒரு படம், இத்திரைப்படத்தின் மூலம் சமுதாயத்திற்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தான் சம்பாதித்த பணத்தில் அந்த சமூக மாணவர்களுக்கு உதவி செய்ய ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளார் சூர்யா. நடிகர் என்பதால் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று சுயநலமாக இல்லாமல், சமூக அக்கறையோடு பேசக்கூடியவர், செயல்படக்கூடியவர் சூர்யா, இன்று தமிழகத்தில் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். படித்த இளைஞர்களுக்கு நல்ல வழி காட்டும் வகையில் அன்புமணி போன்றவர்கள் செயல்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் சமூகத்தில் என்ன விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறீர்கள்?  உயர் படிப்பு படித்த அன்புமணி ராமதாஸ் உங்கள் இளைஞர்களை நல்வழிப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். சினிமா துறை என்பதை நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும், தட்டி கொடுக்க வேண்டும். இந்த ஒரு சிறிய துறையில் நீங்கள் அடிக்கடி தலையிட்டு இடையூறு செய்கிறீர்கள். திரைப்படத்தில் மது அருந்தகூடாது, சிகரெட் பிடிக்க கூடாது என்று கூறும் நீங்கள் உங்கள் சமூக இளைஞர்களுக்கு அந்த அறிவரையை சொல்லுங்கள். 

ஒரு நடிகரை தாக்குவேன், அடிப்பேன் என்று உங்கள் கட்சியினர் பேசுவது முழுக்க முழுக்க ரவுடித்தனம். ரவுடித்தனத்தை அன்புமணியை ஆதரிக்கிறார். இப்போது அடித்துவிட்டு வந்தால் ஒரு லட்சம் என்பார்கள், பிறகு தலையை வெட்டி விட்டு வந்தால் 5 லட்சம் என்பார்கள். இதற்கு பெயர்தான் ரவுடியிசம். இது ஒரு ஜனநாயக நாடு, தியேட்டர்களை எரிப்போம், தியேட்டர்களில் படம் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வதற்கு நீங்கள் யார். நீங்கள் என்ன தியேட்டர் உரிமையாளர்களா? நம்மை யாரென்ன செய்துவிட முடியும், யாரும் தங்களை தட்டிக் கேட்க முடியாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது. அனைவரும் சூர்யாவிற்கு குரல் கொடுக்க முன்வேண்டும், குறிப்பாக முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றவர்கள் குரல் கொடுக்க வேண்டும். அப்படி குரல் கொடுத்தால் தான் இதுபோன்ற மிரட்டல் அரசியல் கட்சிகள் பயந்து ஒதுக்குவார்கள். இது போன்ற கட்சி புறக்கணிக்கப்பட வேண்டும். முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல் போன்றவர்கள் எதற்காக பயப்பட வேண்டும், அப்படி பயந்து என்ன செய்யப் போகிறீர்கள் துணிந்து குரல் கொடுக்க முன் வாருங்கள் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
 

click me!