பாஜகவை இப்போ ஒடுக்கலைனா.. அப்புறம் எப்போவுமே முடியாது!! பிரமாண்டமாக உருவாகும் மாற்று சக்தி

First Published Mar 5, 2018, 1:14 PM IST
Highlights
chanrasekar rao initiates national level third front


காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற இலக்குடன் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக செயல்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றாற்போலவே, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், குஜராத் ஆகிய மாநிலங்களை கைப்பற்றியது பாஜக. 

தற்போது திரிபுராவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள பாஜக, நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் அமைய உள்ள ஆட்சியில் அங்கம் வகிக்கிறது. திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க விடாமல் செய்துவிட்டது பாஜக. அடுத்ததாக கர்நாடகாவையும் கைப்பற்ற பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த, பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளை இணைத்து வலுவான கூட்டணியை அமைக்க காங்கிரஸ் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

ஆனால், தற்போது பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது மாற்று அணி அமைக்கும் முயற்சிகளும் நடந்துவருகின்றன. ஏற்கனவே இப்படியான ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. 

தற்போது தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ், காங்கிரஸ், பா.ஜ., கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணியை ஏற்படுத்தும் திட்டத்தை வெளியிட்டு உள்ளார்.

சந்திரசேகர் ராவ் கருத்தை, இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி வரவேற்று உள்ளார். ஜார்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரனும் ஆதரவு தெரிவித்துள்ளார். சந்திரசேகர் ராவை, ஹேமந்த் சோரன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.

இதேபோன்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியும் சந்திரசேகரராவை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணி அமைக்கும் திட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இந்த மூன்றாவது மாற்று அணியில் ஆம் ஆத்மி கட்சியும் இணையும் பட்சத்தில், மேலும் சில கட்சிகளை இணைத்து வலுவான மாற்று சக்தியாக மூன்றாவது அணி உருவாகும்.

எனவே 2019 மக்களவைத் தேர்தல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குமானதாக மட்டுமே இருக்காது. கண்டிப்பாக மும்முனைப் போட்டியாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!