மேற்கு வங்கத்தில் மாறும் காட்சிகள்.. மம்தா கட்சிக்கு தொடர்ந்து தாவும் பாஜகவினர்... அதிர்ச்சியில் பாஜக..!

By Asianet TamilFirst Published Oct 5, 2021, 8:45 AM IST
Highlights

பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்ற பிறகு பாஜகவிலிருந்து பல எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 
 

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பலரும் வெளியேறி பாஜகவில் இணைந்தனர். தேர்தலில் பாஜக எப்படியும் வெற்றி பெற்றுவிடும் மம்தா வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று எண்ணியவர்கள் இப்படி கட்சி மாறினார்கள். ஆனால், தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 3-ஆவது முறையாக மீண்டும் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றவுடனேயே பாஜக எம்எல்ஏவாக வெற்றி பெற்ற முகுல் ராய், மீண்டும் திரிணமுல் காங்கிரசில் சேர்ந்து அதிர்ச்சி அளித்தார். அவரோடு சேர்ந்து பாஜகவிலிருந்து பல முக்கிய தலைவர்கள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு தாவினர்.
இந்நிலையில் பவானிபூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் மம்தா பெரும் வெற்றியைப் பெற்றார். இதனையடுத்து அவர் இனி 5 ஆண்டுகளுக்கும் முதல்வராகப் பணியாற்ற இருந்த சிக்கல் நீங்கியது. இந்த இடைத்தேர்தலைத் தொடர்ந்து பாஜகவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக பாஜக எம்எல்ஏ ஒருவர் அண்மையில் அறிவித்தார். மேலும் மத்திய அமைச்சரவையில் ஜூலை வரை அமைச்சராக இருந்த பபுல் சுப்ரியோவும் திரிணாமூல் காங்கிரசில் இணைந்தார். மம்தாவின் இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு மேலும் பல பாஜக எம்எல்ஏக்கள் கட்சி தாவ தயாராகி வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன.
இதனால் மேற்கு வங்காளத்தில் பாஜக பின்னடைவைச் சந்தித்து வருகிறது. திரிணாமூல் காங்கிரஸிலிருந்து ஏற்கனவே சேர்ந்தவர்களை மேற்கு வங்க பாஜக தலைவர்கள், அரவணைத்துச் செல்ல தயங்குவதால், இப்பட் கட்சி மாறும் படலம் நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

click me!