AIADMK: என்ன துரோகம்னு அவர்கிட்ட கேளுங்க... கூட்டணி மாறுவது பாமகவின் வாடிக்கை.. எடப்பாடியார் ஆவேசம்..!

By vinoth kumarFirst Published Dec 15, 2021, 3:01 PM IST
Highlights

தங்கமணியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள், அவர்களது உறவினர் இல்லங்களில் சோதனை நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கழக அமைப்பு தேர்தல் எழுச்சியோடு நடைபெற்று வரும் நிலையில் காழ்ப்புணர்ச்சியால் சோதனை நடைபெறுகிறது.

பாமகவுக்கு அதிமுக என்ன துரோகம் செய்தது என்பதை ராமதாஸ் தான் கூற வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக சார்பில் 525 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இதில், மூன்று, நான்கு தவிர வேறு எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும்1000 ரூபாய் உதவித் தொகை, நீட் தேர்வு ரத்து, முதியார் உதவித் தொகை மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை உயர்வு என்பது போன்ற எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. பெட்ரோல் டீசல் விலைகுறைக்கப்படும் என வாக்குறுதி அளித்து விட்டு பெட்ரோலுக்கு மட்டும் சிறிதளவு விலை குறைத்தார்கள். டீசலுக்கு குறைக்கவிலை.

 

தங்கமணியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள், அவர்களது உறவினர் இல்லங்களில் சோதனை நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கழக அமைப்பு தேர்தல் எழுச்சியோடு நடைபெற்று வரும் நிலையில் காழ்ப்புணர்ச்சியால் சோதனை நடைபெறுகிறது. அதிமுக செல்வாக்கு உயர்ந்து கொண்டு வருவதை பொறுத்து கொள்ள முடியாமல் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற துடியாத திமுக அரசு அதை திசைத்திருப்ப ரெய்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கீழ்த்தரமான செயல்களில் திமுக அரசு ஈடுபட வேண்டாம். 

வடகிழக்கு பருவமழை துவங்கும் என நன்றாகத் தெரியும் ஆனால் திட்டமிட்டு தூர்வார வில்லை. தூர்வாரி இருந்தால் மழை நீர் தேங்கி இருக்காது. இதை செய்ய தவறிய அரசு திமுக அரசு. ஒரே நேரத்தில் சென்னை மாநகரில் பணியாற்றிய 160 பொறியாளர்களை மாற்றினார்கள் அனுபவமில்லாத பொறியாளர்களை நியமித்தனர். இதுவும் மழைநீர் தேங்கியதற்கு ஒரு காரணம். குளறுபடியான ஆட்சி திமுக என்றார். அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட திட்டங்களை தான் தற்போது முதலமைச்சர் திறந்து வைக்கிறார். 

பாமகவிற்கு  கூட்டணியில் துரோகம் செய்துவிட்டதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு,  நாங்கள் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி வருகிறார்கள் என்ன துரோகம் செய்தனர் என அவர்கள் தான் கூற வேண்டும்.  மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்றார். பாமகவினர் திமுகவிற்கு ஆதரவாக பேசி வருகிறார்களே என்று கேட்டதற்கு, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டது. எனவே அவர்கள் தற்போது கூட்டணியில் இல்லை என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். ஒவ்வொரு தேர்தலின்போதும் பாமக கூட்டணி நிலைப்பாடு மாறுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அது அவர்களது வாடிக்கை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

click me!