Thangamani : சோதனை நடத்துவது தான் திமுகவின் தந்திரமா ? தங்கமணிக்கு ஆதரவு தெரிவித்த ஓபிஎஸ் - ஈபிஎஸ்

By Raghupati RFirst Published Dec 15, 2021, 1:48 PM IST
Highlights

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்டு வரும் சோதனைக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ‘தற்சமயம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சித் தேர்தல் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும், உற்சாகத்தோடும் பெருந்திரளான தொண்டர்கள் ஆர்வத்தோடும் கலந்து கொண்டு 35 கழக மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இந்தத் தேர்தலையொட்டி, உளவுத் துறையின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்பைக் காட்டிலும் கூடுதலாக மெருகேற்றிக் கொண்டு, பலமூட்டிக் கொண்டு வீறுகொண்டு எழுகிறது என்ற செய்தியை தாங்கிக் கொள்ள முடியாத, பொறுத்துக் கொள்ள முடியாத திமுக அரசு, அரசியல் வன்மத்தையும், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், லஞ்ச ஒழிப்புத் துறையை தன்னுடைய ஏவல் துறையாக மாற்றி, அன்புச் சகோதரர் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி, எம்.எல்.ஏ அவர்களுடைய இல்லத்திலும், அவருடைய நண்பர்கள், உறவினர்கள் இல்லங்களிலும் சோதனை என்கின்ற பெயரில் மிகப் பெரிய வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இதை நாங்கள் அடிப்படையிலேயே வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அன்புச் சகோதரர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி, டாக்டர் சி. விஜயபாஸ்கர் போன்ற முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களிலும், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இல்லங்களிலும் அதே போல், சேலம் புறநகர் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவருமான ஆர்.இளங்கோவன் அவர்களுடைய இல்லத்திலும் நடைபெற்ற சோதனைகளைத் தொடர்ந்து, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தற்போது தங்கமணி அவர்களுடைய இல்லத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய சோதனையானது அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை. அண்ணா காலத்தில் இருந்து அரசியல் களமாடிக் கொண்டிருக்கக்கூடிய எத்தனையோ முதுபெரும் தலைவர்கள் திமுக-வில் உள்ளபோது, தன்னுடைய குடும்பம் மட்டும் தான் ஆள வேண்டும், வாழவேண்டும் என்று அரசியல் செய்து கொண்டிருக்கக்கூடிய திமுகவில் தற்போது ஒரு மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. 

ஸ்டாலின் அவர்களுக்கு அடுத்தபடியாக, உதயநிதி தான் அடுத்த தலைவர் என்பதை முன்னிலைப்படுத்தும் விதமாக, அடுத்தக்கட்ட தலைவர்கள் பேச ஆரம்பித்துள்ள இந்தச் சூழ்நிலையில், அரசியல் விமர்சகர்களும், பத்திரிகை ஊடகச் செய்திகளும், தற்போதைய அரசை ஸ்டாலின் அவர்களுடைய மருமகன் சபரீசன் தான் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்ற செய்தியும் பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இதையெல்லாம் மடைமாற்ற வேண்டும் என்பதற்காக பழைய தந்திரமாம் திமுகவின் ஒரே தந்திரமாம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற ஆயுதத்தை தற்போதைய திமுக முதலமைச்சரும் கையில் எடுத்திருக்கிறார். பேசினால் குண்டர் சட்டம், கருத்து தெரிவித்தால் குண்டர் சட்டம். தீவிரமாகக் களமாடினால் வழக்கு, தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்து

கொள்கைப் பிடிப்போடு இருந்தால் லஞ்ச ஒழிப்பு சோதனை என்று புறவாசல் வழியாகவே பயணம் செய்த திமுக, இந்த நிகழ்வையும் புறவாசல் வழியாகவே கையாண்டு கொண்டிருக்கிறது. சோதனையில் தோளோடு தோள் நிற்போம் என்று சொல்லி, மீண்டும் ஒருமுறை திமுகவின் இந்த பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு எங்களுடைய கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் திமுக அரசு ஈடுபடாமல், நேர்மறை அரசியலை முன்னெடுத்து, தேர்தலில் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்காவது நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முன்னெடுப்பை முனையுங்கள் என்று வலியுறுத்தவும் கடமைப்பட்டிருக்கிறோம்’ என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!